வீட்டில் பதுக்கி வைத்திருந்த 8 மூட்டை பட்டாசுகள் பறிமுதல்: வாலிபர் கைது
- வீட்டில் எவ்வித அனுமதியும் இன்றி பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- போலீசார் பதுக்கி வைத்திருந்த பட்டாசு மூட்டைகளை பறிமுதல் செய்து கார்த்தி என்பவரை கைது செய்தனர்.
நீடாமங்கலம்:
தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பட்டாசு விற்பனை கடைகளுக்கு பல்வேறு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், அரசு அனுமதி இன்றி பட்டாசுகளை குடோன் மற்றும் வீடுகளில் பதுக்கி வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே நல்லூர் கிராமத்தை சேர்ந்த கார்த்தி (வயது 26) என்பவரது வீட்டில் எவ்வித அனுமதியும் இன்றி பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ரங்கராஜன் தலைமையில், சிறப்பு தனிப்பிரிவு போலீஸ் அறிவழகன் உள்பட போலீசார் நேற்று மாலை திடீரென அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
வீட்டில் நடத்திய சோதனையில் 8 மூட்டைகளில் பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.30 ஆயிரம் ஆகும். பின்னர், போலீசார் பதுக்கி வைத்திருந்த பட்டாசு மூட்டைகளை பறிமுதல் செய்து கார்த்தி என்பவரை கைது செய்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.