விவசாய தோட்டத்தில் புகுந்த ராட்சத முதலை- பொதுமக்கள் பீதி
- விவசாய நிலத்தில் கிடப்பதால் முதலையை எளிதில் பிடித்து விடலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
- பில்லூர் அணையில் தற்போது நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது.
மேட்டுப்பாளையம்:
சிறுமுகை அருகே உள்ள மொக்கைமேடு பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன்(45) என்பவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இன்று காலை அவர் வழக்கம் போல தனது விவசாய நிலத்தை பார்வையிடுவதற்காக சென்றார்.
அப்போது வாழைமரங்களுக்கு இடையே மரம் போன்ற ஒன்று மாறுபட்ட கலரில் தென்பட்டுள்ளது. உற்றுப் பார்த்தபோது அது சுமார் 12 அடி நீளமுள்ள ராட்சத முதலை என்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ்குமாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற வனச்சரகர் மனோஜ்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று முதலையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். விவசாய நிலத்தில் கிடப்பதால் முதலையை எளிதில் பிடித்து விடலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையில் தற்போது நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டு உள்ளது. வற்றாத ஜீவநதியான பவானி ஆறு வற்றி ஓடை போல் காட்சியளிக்கிறது. ஆறு மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் இல்லாததால் அங்கு இருந்து முதலை வெளியேறி வாழைத்தோட்டத்தில் புகுந்து இருக்கலாம் என வனத்துறையினர் கூறினர்.