உள்ளூர் செய்திகள் (District)

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் என்.எல்.சி.யில் நிரந்தர வேலை வாய்ப்பு கோரி தர்ணா போராட்டம்

Published On 2022-06-06 10:45 GMT   |   Update On 2022-06-06 10:45 GMT
  • 3 சுரங்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் 150- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறோம்.
  • நிரந்தர தொழிலாளர்கள் செய்யும் வேலையை விட நாங்கள் கூடுதலாக செய்கிறோம்.

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.

இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து நிறைவேற்ற வேண்டுமென அதிகாரியிடம் மனு அளித்தனர்.

இன்று காலை 20-க்கும் மேற்பட்ட பேர் திரண்டு கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் 3 சுரங்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் 150- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறோம். நாங்கள் அனைவரும் என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலங்கள் மற்றும் குடியிருப்பு வழங்கி பாதிப்படைந்துள்ளோம்.

இந்த நிலையில் எங்களுடைய வேலைநேரத்தை விட கூடுதலாக 2 மணி நேரம் வேலை பார்க்க சொல்கிறார்கள். அதற்கு எந்த சம்பளமும் வழங்க வில்லை. கூடுதலாக வேலை செய்ய நிர்பந்தம் விதித்து வரும் நிலையில் எங்களுக்கு சம்பள உயர்வு தரவில்லை . மேலும் நிரந்தர தொழிலாளர்கள் செய்யும் வேலையை விட நாங்கள் கூடுதலாக செய்கிறோம்.

ஆகையால் எங்களுடைய வேலையை நிரந்தர படுத்தி சம்பளம் உயர்த்தி தர வேண்டும். இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் நேரடியாக தலையிட்டு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தனர்.

அப்போது போலீசார் உரிய முறையில் மனு அளித்து உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என தெரிவித்ததை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News