வாட்ஸ்அப் லிங்க் மூலம் நெல்லை வாலிபரிடம் ரூ.13½ லட்சம் மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை
- குறைந்த அளவு முன்தொகை செலுத்தினால், மாதந்தோறும் ஊதியம் போல் பணம் வந்து கொண்டிருக்கும் என்று கூறி மோசடி செய்யும் கும்பல் அதிகரித்துள்ளது.
- தொடக்கத்தில் குறைந்த அளவு லாபத்தை கொடுக்கும் கும்பல், நாளடைவில் அதிக அளவு பணத்தை பறித்து கொண்டு ஏமாற்றி விடுகின்றனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள சங்கர்நகர் பாலாஜி நகரை சேர்ந்தவர் இமானுவேல். இவரது மகன் சார்லஸ் (வயது 31). இவர் மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார். இவரது செல்போன் வாட்ஸ்அப்பில் கடந்த செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் குறுந்தகவல் மற்றும் லிங்க் வந்துள்ளது.
தொடர்ந்து அவரது செல்போனுக்கு வந்த அழைப்பில் எதிர்புறம் பேசிய நபர், வாட்ஸ்அப்பில் அனுப்பிய அந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் அதிக அளவு பொருட்கள் ஆர்டர் செய்யுங்கள். விளம்பரங்களை பாருங்கள். அப்போது உங்களுக்கு ரேட்டிங் அதிகரித்து லாபமாக பணம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதனை உண்மை என்று நம்பிய சார்லஸ், அதற்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பேசிய அந்த நபர், வாட்ஸ்அப்பில் 2 வங்கி கணக்குகளை அனுப்பி விடுவதாகவும், அதில் பணம் செலுத்துமாறும் கூறியுள்ளார். அவ்வாறு அனுப்பும் பணத்திற்கு வட்டியுடன் கூடுதல் லாபம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதனை நம்பிய சார்லஸ் கடந்த செப்டம்பர் 9-ந்தேதி முதல் கொஞ்சம் கொஞ்சமாக 2 வங்கி கணக்குகளுக்கும் பணம் செலுத்தி வந்துள்ளார். இவ்வாறாக அவர் நேற்று முன்தினம் வரை ரூ.13 லட்சத்து 44 ஆயிரத்து 803 செலுத்திய நிலையில் அவருக்கு எந்த லாபமும் வரவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த சார்லஸ் நேற்று நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ரமா வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மர்மநபர் குறித்து விசாரித்து வருகிறார். நெல்லை மாவட்டத்தில் இதுபோன்ற மோசடிகள் அதிக அளவில் நடக்கிறது. குறிப்பாக யூ-டியூப்பில் விளம்பரங்களை பார்த்து அதற்கு ரேட்டிங்கை அதிகரிக்க செய்ய வேண்டும். இதற்கு குறைந்த அளவு முன்தொகை செலுத்தினால், மாதந்தோறும் ஊதியம் போல் பணம் வந்து கொண்டிருக்கும் என்று கூறி மோசடி செய்யும் கும்பல் அதிகரித்துள்ளது.
தொடக்கத்தில் குறைந்த அளவு லாபத்தை கொடுக்கும் அந்த கும்பல், நாளடைவில் அதிக அளவு பணத்தை பறித்து கொண்டு ஏமாற்றி விடுகின்றனர். வீட்டில் இருக்கும் பெண்கள் அதிக அளவில் இதுபோன்ற மோசடியில் சிக்கும் நிலையும் இருந்து வருகிறது. மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பில் ஒவ்வொரு கிராமம், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் எவ்வளவோ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இனியும் இதுபோன்ற மோசடிகளில் யாரும் சிக்கிவிட வேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.