உள்ளூர் செய்திகள்

பரந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலையத்தின் கட்டுமானம்-பொருளாதார ஆலோசகரை நியமிப்பதில் தாமதம்

Published On 2023-02-09 09:53 GMT   |   Update On 2023-02-09 09:53 GMT
  • பரந்தூரில் புதிய விமான நிலைய கட்டுமானப்பணி மற்றும் பொருளாதாரம் குறித்த அறிக்கை தொடர்பான ஆலோசகரை நியமிப்பது தொடர்பாக அரசு திட்டமிட்டது.
  • விரிவான அறிக்கை சமர்ப்பிக்க நிறுவனத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தன.

காஞ்சிபுரம்:

சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 4,750 ஏக்கரில் அமைய உள்ளது.

இந்த புதிய விமான நிலையத்தில் 2 ஓடுபாதைகள், 2 பயணிகள் முனையங்கள், சரக்குகள் கையாளும் முனையம் மற்றும் பராமரிப்பு, பழுதுபார்க்கும் மையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு 10 கோடி பயணிகளை கையாளும் வகையில் புதிய விமான நிலையம் அமைக்கப்படுகிறது.

இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் புதிய விமான நிலைய கட்டுமான பணிக்கு விவசாய நிலங்கள், நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே பரந்தூரில் புதிய விமான நிலைய கட்டுமானப்பணி மற்றும் பொருளாதாரம் குறித்த அறிக்கை தொடர்பான ஆலோசகரை நியமிப்பது தொடர்பாக அரசு திட்டமிட்டது.

இதுகுறித்த விரிவான அறிக்கை சமர்ப்பிக்க நிறுவனத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தன. ஆனால் நிறுவனத்தினர் கூடுதல் அவகாசம் கேட்டதால் கடந்த திங்கட்கிழமை (6-ந்தேதி) இறுதி செய்யப்பட இருந்த டெண்டர் முடிவு செய்யப்படவில்லை. இதற்கு முன்பும் ஏற்கனவே ஒருமுறை ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 2-வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் தொடர்பான விரிவான அறிக்கை தயாரிக்க போதுமான அவகாசம் இல்லை என்று கூறப்பட்டதால் இந்த மாத இறுதி (27-ந்தேதி) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, 'புதிய விமான நிலையம் அமைய உள்ள கிராம மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. எனவே திட்டத்தில் எந்த பாதிப்பும் வராது. விமான நிலையம் கட்டுவதற்கான விரிவான தொழில்நுட்ப-பொருளாதார அறிக்கையை மேற்கொள்ள ஆலோசகரை முடிவு செய்யும் டெண்டர் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த டெண்டர் கடந்த திங்கட்கிழமை திறக்கப்பட இருந்தது. திட்டத்தை உருவாக்கி விண்ணப்பிக்க போதுமான நேரம் இல்லை என்று அவகாசம் கேட்டதை அடுத்து வருகிற 27-ந்தேதி வரை டெண்டர் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெண்டரில் உள்ள சுமார் 10 ஷரத்துகளில் அரசு சிறிய திருத்தங்களைச் செய்துள்ளது என்றனர்.

Tags:    

Similar News