உள்ளூர் செய்திகள்

ஆம்புலன்ஸ் வர தாமதம்- விபத்தில் சிக்கிய வியாபாரியை மினிலாரியில் ஏற்றி சென்றதால் பரபரப்பு

Published On 2024-02-14 05:12 GMT   |   Update On 2024-02-14 05:12 GMT
  • மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில் ஆனந்த் 50 அடி தூரத்திற்கு சாலையில் இழுத்து செல்லப்பட்டார்.
  • போலீசார் மினி லாரியை ஓட்டி வந்த டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி:

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது38). இவர் பல்வேறு இடங்களுக்கு சென்று சீன பீங்கானால் செய்யப்பட்ட அழகு சாதன பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள வென்னிமலை முருகன் கோவில் மாசி திருவிழாவையொட்டி அழகு சாதன பொருட்களை விற்பனை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். நேற்று மாலை பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரம் விலக்கு அருகே நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது தென்காசியில் இருந்து நெல்லைக்கு பார்சல் ஏற்றி கொண்டு ஒரு மினி லாரி சென்றது. அதனை நெல்லை பழைய பேட்டையை சேர்ந்த ஜெயராமன் (42) என்பவர் ஓட்டிச் சென்றார். அப்போது சாலையை கடக்க முயன்ற போது மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில் ஆனந்த் 50 அடி தூரத்திற்கு சாலையில் இழுத்து செல்லப்பட்டார். இதில் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ஆன்ந்த் உயிரிருக்கு போராடினார்.

சம்பவ இடத்திற்கு சென்ற பாவூர்சத்திரம் போலீசார், ஆனந்தை மீட்டு சிகிச்சைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். நீண்ட நேரம் காத்திருந்தும் வராததால் அங்கிருந்தவர்கள் உயிருக்கு போராடிய ஆனந்தை மீட்டு மினி லாரியில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக பாவூர்சத்திரம் போலீசார் மினி லாரியை ஓட்டி வந்த டிரைவர் ஜெயராமன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News