இருதரப்பினர் மோதல் பிரச்சினையில் காளியம்மன் கோவில் இடிப்பு- ராஜபாளையத்தில் பதட்டம்
- கடந்த 10 நாட்களுக்கு கோவிலில் வழிபாடு நடத்துவதில் இருதரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியார் ரோடு தாட்கோ காலனியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீசந்தன காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. தினமும் கோவில் திறக்கப்பட்டு அம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு வந்தன.
இந்த கோவிலுக்கு அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். அத்துடன் இங்கு திருவிழாவும் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கடந்த 10 நாட்களுக்கு கோவிலில் வழிபாடு நடத்துவதில் இருதரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது வாக்குவாதம் முற்றியதில் அவர்கள் மோதிக் கொள்ளும் சூழலும் உருவானது. இதையடுத்து ராஜபாளையம் தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
அப்போது கோவிலில் யாரும் எந்தவிதமான பிரச்சினையும் செய்யக்கூடாது, கோவிலுக்கு வழிபாடு நடத்த வருகை தருபவர்களுக்கு எந்தவிதமான இடையூறும் செய்யக்கூடாது என்று உறுதியேற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இதுதொடர்பாக தீர்மானமும் போட்டு அதில் பிரச்சினைக்கு காரணமான இருதரப்பினரும் கையெழுத்திட்டனர்.
இந்தநிலையில் நேற்று காலை ஒரு சில நபர்கள் சந்தன காளியம்மன் கோவிலை கடப்பாறை, இரும்புக்கம்பிகள் உதவியுடன் இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் வடக்கு வெங்காநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் ஜனகன் ராஜா, அவரது உதவியாளர் மற்றும் சிலர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது கோவிலை இடித்துக்கொண்டிருந்த நபர்களை தடுத்து எச்சரித்ததோடு கண்டித்தும் அனுப்பினார். ஆனால் அவர்கள் கோவிலின் பெரும்பாலான பகுதியை இடித்துவிட்டனர். பின்னர் இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் பிரச்சினையில் கோவில் இடிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.