வேலூர்-ஆற்காடு ரோட்டில் 32 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு: பொதுமக்கள் போராட்டம்
- வீடு மற்றும் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.
- ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வேலூர்-ஆற்காடு சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோவில் முதல் காகிதபட்டறை டான்சி தொழிற்சாலை வரை மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 32 வீடுகள் மற்றும் கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.
ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடந்த ஒரு வருடமாக முயற்சி செய்து வருகின்றனர்.
இதில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கடைகளை அவர்களே அகற்ற, வீடு மற்றும் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.
கால அவகாசம் கொடுத்த பிறகும் கூட அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை.
இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இன்று காலை பொக்லைன் எந்திரத்துடன் காகிதப்பட்டறைக்கு வந்தனர்.
மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் பிரகாஷ், இளநிலை பொறியாளர் விஜயா, வேலூர் தாசில்தார் செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், கருணாகரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் அந்த பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வேலூர்-ஆற்காடு சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
மேலும் சாலை யோரத்தில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டக்காரர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.