திண்டுக்கல் அருகே ஊராட்சி அலுவலகத்தை இடமாற்றக்கோரி மக்கள் போராட்டம்
- திண்டுக்கல் அருகே எரியோடு ஊராட்சி மன்ற அலுவலகம் புளியம்பட்டியில் செயல்பட்டு வருகிறது.
- சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அங்கு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எரியோடு:
திண்டுக்கல் அருகே எரியோடு ஊராட்சி மன்ற அலுவலகம் புளியம்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இங்கு கிழக்கு வடுகம்பாடி, மேற்குவடுகம்பாடி, பாரதிநகர், வரதராஜபுரம், பொம்மகவுண்டன்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக வருகின்றனர்.
அங்கிருந்த பழைய அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அலுவலகம் கட்ட கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு அனுமதி வழங்கியது. அதன்படி புதிய கட்டிடத்திற்கு பூமிபூஜை நடத்தப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அங்கு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வடுகம்பட்டி ஊராட்சி அலுவலகத்தை புளியம்பட்டியில் இருந்து வடுகம்பாடிக்கு மாற்ற வேண்டும். புதிய கட்டிடம் அங்குதான் கட்டவேண்டும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டாட்சியர் ரமேஷ் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். வருகிற 12-ந்தேதி சமூகஉடன்பாடு, அமைதிபேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அன்று தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசப்படும் என்றார்.
அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) கற்பகம், எரியோடு போலீசார் உடனிருந்தனர். தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் சமரசபேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படும் என உறுதியளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.