தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் எவை? நாளை பேச்சுவார்த்தை
- வைகோ 2 தொகுதிகள் கேட்ட நிலையில் ஒரு தொகுதி மட்டுமே கொடுத்து இருப்பதால் விரும்பும் தொகுதியையாவது கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று தி.மு.க. விரும்புகிறது.
- கடந்த முறை திருவள்ளூர் தனித்தொகுதி மட்டும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 9 தொகுதிகள் தமிழ்நாட்டிலும் ஒரு தொகுதி புதுவையிலும் உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த முறை கன்னியாகுமரி, விருதுநகர், திருச்சி, ஆரணி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கரூர், தேனி, சிவகங்கை ஆகிய 9 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. இதில் தேனியில் மட்டும் தோல்வி அடைந்தது.
கடந்த முறை வெற்றி பெற்ற 8 தொகுதிகளும் வேண்டும், தேனிக்கு பதில் வேறு ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது.
ஆனால் 4 தொகுதிகளை மாற்ற வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதற்கு முக்கிய காரணம் திருச்சி அல்லது விருதுநகர் வேண்டும் என்பதில் ம.தி.மு.க. பிடிவாதமாக உள்ளது.
வைகோ 2 தொகுதிகள் கேட்ட நிலையில் ஒரு தொகுதி மட்டுமே கொடுத்து இருப்பதால் விரும்பும் தொகுதியையாவது கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று தி.மு.க. விரும்புகிறது.
அவ்வாறு திருச்சி அல்லது விருதுநகரை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கினால் மயிலாடுதுறையை காங்கிரசுக்கு வழங்கப்படும்.
அதேபோல் கிருஷ்ணகிரி தொகுதிக்கு பதிலாக கடலூர் அல்லது அரக்கோணத்தை எடுத்துக் கொள்ளும்படி தெரிவித்துள்ளார்.
கரூருக்கு பதிலாக ஈரோடு வழங்கப்படும் என்று தெரிகிறது. ஈரோடு தொகுதி கடந்த தேர்தலில் ம.தி.மு.க. வென்ற தொகுதி. ஆனால் இந்த முறை அந்த தொகுதியை ம.தி.மு.க. கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிக்கலில் இருந்த ஆரணியை கை வைக்கவில்லை. மீண்டும் காங்கிரசுக்கே ஒதுக்க முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த முறை திருவள்ளூர் தனித்தொகுதி மட்டும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த முறை தேனிக்கு பதிலாக தென்காசி தனித்தொகுதி ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. காங்கிரசில் ஏற்கனவே தலித்துக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
காங்கிரஸ் தரப்பில் தொகுதிகளை மாற்ற வேண்டாம் என்று வற்புறுத்தப்படுகிறது.
கம்யூனிஸ்டு மற்றும் ம.தி.மு.க. தொகுதிகள் இன்றைக்குள் முடிவாகி விடும் என்று கூறப்படுகிறது.
காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து நாளை பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.