கிராம சபை கூட்டத்தில் தி.மு.க-நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் மோதல்: போலீசார் விசாரணை
- ஞானம், சுதாகரை மிரட்டும் தோனியில் அவதூறாக பேசியதால் 2 பேருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
- படுகாயம் அடைந்த 2 பேரும் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
இதில் அதே பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சுதாகர் என்பவர் கோரிக்கை மனு வழங்கினார். அதில் தி.மு.க. பிரமுகர் ஞானம் என்பவர் தன்னுடைய தங்கையின் பெயரில் பணிதள பொறுப்பாளராக வேலை செய்து வருகிறார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக அவர் பணிதள பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
அவரை மாற்றி, வேறு ஒருவரை புதியதாக நியமிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த கோரிக்கை கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதாக கூறப்படுகிறது. இதனால் ஞானம் மற்றும் சுதாகர் ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஞானம், சுதாகரை மிரட்டும் தோனியில் அவதூறாக பேசியதால் 2 பேருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் ஒருவரை, ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் அவர்கள் தனித்தனியாக ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.