உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்பனையை தடுக்க முயன்ற தி.மு.க. பிரமுகரை வெட்டிக்கொல்ல முயன்ற கும்பல்

Published On 2023-01-20 04:08 GMT   |   Update On 2023-01-20 04:08 GMT
  • புகார் மனுவில் கஞ்சா விற்பனையை தடுக்க முயன்றதால் மர்மநபர்கள் என்னை கொல்ல முயற்சித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
  • போலீசார் வழக்குபதிந்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

வானூர்:

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகர தி.மு.க. துணை செயலாளர் பக்ருதீன் (வயது 42). இவரது சகோதரி நபிஷா கோட்டக்குப்பம் நகராட்சி 27-வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.

இந்த வார்டு பகுதியில் கஞ்சா விற்பனை அதிகம் நடைபெறுகிறது. எனவே இதனை கண்காணிக்க அந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமரா அமைத்துள்ளார். இந்த கேமராக்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் உடைத்துள்ளனர். இது தொடர்பாக பக்ருதீன் கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தார். இதையொட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் பக்ருதீன் சொந்த வேலை விஷயமாக திருச்சி சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று இரவு கோட்டக்குப்பம் பஸ்நிலையத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றார்.

அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் பக்ருதீனை சுற்றிவளைத்து கத்தியால் வெட்டியது. இதில் அவர் கூச்சலிட்டவாறு ஓடினார். சத்தம்கேட்டு அவரது உறவினர்கள் ஓடிவந்தனர். ஆட்கள் வருவதை அறிந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கத்தி வெட்டில் படுகாயம் அடைந்த பக்ருதீன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவிட்டு கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தார். புகார் மனுவில் கஞ்சா விற்பனையை தடுக்க முயன்றதால் மர்மநபர்கள் என்னை கொல்ல முயற்சித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News