பாரூர் அருகே கோவிலில் இரட்டை கொலை: 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை
- சபரிவாசன், ராஜ்குமார் ஆகிய 2 பேரும் நேற்று புதிதாக கட்டப்பட்டு வரும் கோவிலில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.
- இரட்டை கொலை குறித்து பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா பாரூர் அருகே பண்ணந்தூரை அடுத்துள்ள சாதி நாய்கன்பட்டி கிராமத்தில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை இடித்து விட்டு புதிதாக கட்டும் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த கோவில் திருப்பணியின் ஒரு பகுதியாக சிமெண்டு சிற்பங்கள் செய்யும் பணியில், கடலூர் மாவட்டம் பிச்சாவரம் மேலத்தெருவை சேர்ந்த ராஜ்குமார் (வயது 37), சிதம்பரம் வயலூரை சேர்ந்த சபரிவாசன் (58) ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் சபரிவாசன், ராஜ்குமார் ஆகிய 2 பேரும் நேற்று புதிதாக கட்டப்பட்டு வரும் கோவிலில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.
இதைகண்டு அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பொதுமக்கள் பாரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராகவன், சிவசந்தர், கார்த்திகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் நேற்று முன்தினம் இந்த கோவில் திருப்பணிக்கு புதிதாக வந்திருந்த சிதம்பரம் பகுதியை சேர்ந்த கணேசன், கடலூர் மாவட்டம் வன்னியபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார் ஆகிய 2 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
இரட்டை கொலை குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ராஜ்குமார், சபரிவாசன் ஆகிய 2 பேரும் மதுபோதையில் இருந்ததாகவும், அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதில் இந்த கொலைகள் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
இந்த இரட்டை கொலை குறித்து பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.