கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவிக்கு சாப்பாடு கூட தராமல் தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை
- ராகேஷின் சகோதரியான சுதா என்பவரும் கணவர் கைவிட்டதால் அண்ணனுடன் வசித்து வருகிறார்.
- தாய் வீட்டிற்கு சென்ற செண்பகாதேவி சாத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பங்களா தெரு பகுதியைச் சேர்ந்தவர் செண்பகாதேவி (வயது 31). இவருக்கும் மதுரை சொக்கலிங்க நகர் பகுதியைச் சேர்ந்த இந்திரா மகன் ராகேஷ் என்பவருக்கும் கடந்த 10.3.2013-ல் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது, பெண் வீட்டார் சார்பில் 50 பவுன் நகை, மணமகனுக்கு 7 பவுனில் தங்க செயின், ரூ.1 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக வழங்கப்பட்டது. மகிழ்ச்சியுடன் தொடங்கிய புதுமண தம்பதியினரின் மணவாழ்க்கை காலப்போக்கில் கசக்க தொடங்கியது.
இதற்கிடையே ராகேஷின் சகோதரியான சுதா என்பவரும் கணவர் கைவிட்டதால் அண்ணனுடன் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துவந்த ராகேஷ் சொந்தமாக தொழில் செய்ய நினைத்தார். இதற்காக மனைவியிடம் அவர்களது வீட்டில் நகை, பணம் வாங்கி வருமாறு கூறினார்.
உடனடியாக செண்பகாதேவி, தான் அணிந்திருந்த 30 பவுன் நகையை கணவர் தொழில் செய்வதற்காக கழற்றி கொடுத்தார். ஆனால் அதனை பெற்றுக்கொண்ட ராகேஷ் எந்தவிதமான தொழிலும் தொடங்க முன் வரவில்லை. இதுபற்றி மனைவி கேட்டபோது, அந்த நகை அனைத்தையும் தனது தங்கை சுதாவிடம் கொடுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு உருவானது. கூடுதல் வரதட்சணையாக 50 பவுன் நகை மற்றும் பணம் வாங்கி வருமாறு கூறி ராகேஷ் மனைவி செண்பகாதேவியை தனி அறையில் அடைத்துவைத்து சாப்பாடு கூட தராமல் அடித்து, உதைத்து சித்ரவதை செய்துள்ளார். இதற்கு அவரது தாய் இந்திரா மற்றும் சகோதரி சுதா ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
பின்னர் செண்பகாதேவியை வீட்டை விட்டே துரத்திவிட்டுள்ளனர். தனது தாய் வீட்டிற்கு சென்ற செண்பகாதேவி இதுகுறித்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த கணவர் ராகேஷ், மாமியார் இந்திரா, நாத்தனார் சுதா ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.