நடுரோட்டில் வாலிபரை புரட்டியெடுத்த போதை கும்பல்- சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதால் பரபரப்பு
- நாகர்கோவில் ஆயுதப்படை குடியிருப்பு சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
- சம்பவத்தில் தாக்கப்பட்ட வாலிபர், ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
நாகர்கோவில்:
மது உள்ளிட்ட போதைப் பொருட்களால் சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இதனால் போதை பழக்கத்தை ஒழிக்க அரசு நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் போதை பழக்கமும் அதனால் பல பிரச்சனைகளும் தினமும் தொடர்ந்தே வருகின்றன.
இந்த நிலையில் சினிமாவில் போதைக் கும்பல், யாரிடமாவது வம்பிழுத்து விரட்டி விரட்டி தாக்குவது போன்ற ஒரு காட்சி, சமூக வலைதளங்களில் கடந்த 2 நாட்களாக வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குமரி மாவட்டத்தில் நடந்துள்ள இந்த சம்பவத்தில் ஒரு வாலிபரை, ஒரு கும்பல் மாறி மாறி தாக்குவதும் அந்த வாலிபர் கீழே விழுந்த நிலையிலும், அவரை தாக்கி சட்டையை கிழிப்பது போன்ற காட்சிகள் வீடியோவில் உள்ளன.
மது போதை தகராறே இந்த தாக்குதலுக்கு காரணம் என தற்போது தெரியவந்துள்ளது. அதுவும் போலீஸ் நடமாட்டம் அதிகம் உள்ள ஆயுதப்படை மைதானம் அருகிலேயே இந்த தாக்குதல் நடந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
நாகர்கோவில் ஆயுதப்படை குடியிருப்பு சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அங்கு வட்டக்கரை பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் மது வாங்க வந்துள்ளார். அப்போது அங்கு ஒரு கும்பல் மது அருந்திக் கொண்டிருந்துள்ளது. வட்டக்கரை வாலிபர் மது வாங்கி விட்டு புறப்பட்ட போது, அந்தக் கும்பலுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சிறிது நேரத்தில் இது மோதலாக மாறியது. மது அருந்திக் கொண்டிருந்த கும்பல், வட்டக்கரை வாலிபர் மீது தாக்குதல் நடத்தியது. அந்த வாலிபர் சாலையில் கீழே விழுந்தபோதும், கும்பல் விடாமல் தாக்கி உள்ளது. ஒரு கட்டத்தில் அவரது சட்டை கிழிந்தது. இருப்பினும் விடாமல் கும்பல் தாக்கியது. அந்த நேரத்தில் சாலையில் வாகனங்களில் சென்ற பலரும் இதனை கண்டு கொள்ளாமல் செல்கின்றனர். இது பற்றி விசாரித்த போது இது போன்ற தாக்குதல் இந்தப் பகுதியில் அடிக்கடி நடப்பதாகவும் போதைக்கு அடிமையான கும்பல் மோதலில் ஈடுபட்டு வருவதாகவும் சிலர் தெரிவித்தனர். சம்பத்தன்று நடந்த தாக்குதல் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தில் தாக்கப்பட்ட வாலிபர், ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். மோதல் சம்பவம் குறித்த வீடியோ வைரலான நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரிப்பது யார்? என்பது அதை விட பரபரப்பாக உள்ளது. சம்பவம் நடந்த பகுதி நேசமணி நகர் போலீசுக்கு உட்பட்டதா? கோட்டார் போலீசுக்கு உட்பட்டதா? என்பதில் ஒரு உடன்பாடு வராததால் வழக்கு பதிவு செய்வதில் தாமதமான நிலை நிலவுகிறது.