அ.தி.மு.க. உடையவில்லை; கட்டுக்கோப்பாக இருக்கிறது- எடப்பாடி பழனிசாமி உற்சாக பேட்டி
- கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டு விலை மதிக்க முடியாத உயிரை காப்பாற்றினோம்.
- இன்று மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி மட்டும்தான் கொடுக்கிறார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயார் ஆகி வரும் நிலையில் அ.தி.மு.க.வை தயார்படுத்தும் அதிரடி நடவடிக்கைகளை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு உள்ளார்.
அடுத்த மாதம் மதுரையில் மாநாடு நடத்தி அ.தி.மு.க. தொண்டர்களிடம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த அவர் திட்டமிட்டு உள்ளார். இது தொடர்பாக ஆலோசனை நடத்த இன்று (புதன்கிழமை) அவர் சென்னையில் அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டினார்.
சென்னை ராயப்பேட்டை தலைமை கழகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மதுரை அ.தி.மு.க. மாநாட்டுக்கு இலச்சினையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
இதையடுத்து அவர் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க.வை வீழ்த்துவதற்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கட்சியினர் எத்தனையோ வித்தைகளை அரங்கேற்றினார்கள். அத்தனையும், கழக தொண்டர்கள், நிர்வாகிகள் மூலம் தகர்த்தெறியப்பட்டது.
இந்த ஓராண்டு காலத்தில் பல விமர்சனங்களை சந்தித்தோம். அ.தி.மு.க. 3 ஆக, 4 ஆக போய் விட்டது. அதில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கையும் குறைந்து போய் விட்டது என்று எதிரிகள் விமர்சனம் செய்தனர். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கின்ற விதமாக கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் இந்த பணியை எழுச்சியோடு மேற்கொண்டு ஒன்றரை மாத காலத்தில் 1 கோடியே 60 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து சரித்திரம் படைத்து இருக்கிறோம்.
இனி அ.தி.மு.க. வெற்றிடம் கொண்டது அல்ல என்பதை நிரூபித்துள்ளோம். இனி அந்த வார்ததையை யாரும் பயன்படுத்த வேண்டாம். தமிழகத்திலேயே அதிக உறுப்பினர்கள் கொண்ட ஒரே கட்சி அ.தி.மு.க.தான். வேறு எந்த கட்சியிலும் இவ்வளவு உறுப்பினர்கள் கிடையாது.
அதுவும், இளைஞர்கள், சகோதரிகள், கழக உடன்பிறப்புகள் நிறைந்த இயக்கம் அ.தி.மு.க.தான். இது தொண்டர்கள் நிறைந்த கட்சி.
சில பேர் இந்த இயக்கத்தை முடக்க வேண்டும், உடைக்க வேண்டும் என்று கனவு கண்டார்கள். தி.மு.க.வுக்கு 'பி' அணியாக இருந்து செயல்பட்டார்கள். அவர்களுக்கு இந்த 75 நாட்களில் கழக தொண்டர்கள், நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அற்புதமாக செயல்பட்டு அ.தி.மு.க. உடையவும் இல்லை, சிந்தவும் இல்லை. சிதறவும் இல்லை, கட்டுக்கோப்பான இயக்கம் என்பதை இந்த உறுப்பினர் சேர்க்கையின் மூலம் நிரூபித்து காட்டி இருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கண்ட கனவை நனவாக்கும் வகையில் அடுத்து வருகின்ற தேர்தலுக்கு அடித்தளமாக எங்களுடைய வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு மதுரையில் நடக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா சட்ட போராட்டம் நடத்தினார். அவரது வழியில் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை பெற்றது.
அந்த தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று எங்களுடைய எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் 22 நாட்கள் குரல் கொடுத்தோம். 22 நாட்களும் பாராளுமன்ற அவை ஒத்தி வைக்கப்பட்டது. இது சரித்திர சாதனை.
அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் காவிரியில் நமக்கு எவ்வளவு பங்கு நீர் கிடைக்குமோ அதை கொடுத்தனர். இப்போது காங்கிரசும் தி.மு.க.வும் இணைந்து இருக்கின்றன. ஒரே கூட்டணியில் உள்ளன. முதலமைச்சர் ஏன் காவிரி நீரை திறந்து விடுமாறு வற்புறுத்தக்கூடாது.
இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பேன் என்று சொல்லும் முதலமைச்சர், கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் முதல்-மந்திரியை தொடர்பு கொண்டு பேசி நமக்கு ஜூன் மாதம் கிடைக்க வேண்டிய 9 டி.எம்.சி. தண்ணீரை ஏன் பெறவில்லை? இது விவசாயிகளுக்கு இழைக்கப்படுகின்ற அநீதி.
கர்நாடகா மாநிலம் அமைதியாக இருக்கிறது. அதை சீர்குலைப்பதற்காக துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் மேகதாது பற்றிய செய்தியை வெளியிடுகிறார் என்று நான் கருதுகிறேன்.
மத்திய அரசு கொண்டு வரும் பொது சிவில் சட்டத்தை பற்றி எங்களின் தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளோம்.
அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவ துறை சிறப்பாக இருந்தது. 10 ஆண்டு காலம் பொற்கால ஆட்சி நடத்தினோம். மருத்துவ துறையில் சாதனை படைத்தோம். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய அளவில் தொடர்ந்து 3 ஆண்டு காலம் முதன்மையாக இருந்து விருதுகளை பெற்றோம்.
இன்று 4-வது இடத்துக்கு சென்று விட்டது என்று நினைக்கிறேன். கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டு விலை மதிக்க முடியாத உயிரை காப்பாற்றினோம்.
இன்று மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி மட்டும்தான் கொடுக்கிறார். அவரிடம் நிர்வாக திறமை இல்லை. 2 ஆண்டு காலத்தில் மருத்துவ துறை சீரழிந்து விட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற குழந்தையின் கை அகற்றப்பட்டு விட்டதாக செய்திகள் வெளிவந்தன. இது வேதனையான விஷயம். ஒரு குழந்தையை பெற்றெடுத்த தாய்க்குதான் அதன் கஷ்டம் தெரியும். அந்த குடும்பத்தினருக்கு தான் வலி தெரியும். அதை இந்த அரசு உணர வேண்டும். உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தால் குழந்தைக்கு கையை அகற்றும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்காது.
கடலூரில் சளி இருப்பதாக சிகிச்சைக்கு சென்றவர்களுக்கு நாய்க்கடி ஊசி போடுகிறார்கள்.
அ.தி.மு.க. ஆட்சியில் 2 கையும் இல்லாத ஒருவருக்கு 2 கையும் பொருத்தி சாதனை படைத்தோம். இது போன்ற சாதனையை அ.தி.மு.க. ஆட்சியில்தான் பார்க்க முடியும். அ.தி.மு.க. ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தோம். தி.மு.க. ஆட்சியில் ஸ்டான்லி மருத்துவமனையை கூட சரியாக பராமரிக்கவில்லை. இனியாவது தி.மு.க. அரசு கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து விழிக்க வேண்டும்.
பருவமழை இன்று சரியாக பெய்யாததால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். கடைமடை பகுதிக்கு மட்டுமல்ல ஏற்கனவே நடவு செய்த பகுதிக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. கடைமடை பகுதிக்கு சுத்தமாக தண்ணீர் போகவே இல்லை.
மேட்டூர் அணை நீர் மட்டம் குறைந்து கொண்டே இருக்கிறது. கர்நாடக அரசிடம் கேட்டால் அவர்கள் குடிப்பதற்கே தண்ணீர் இல்லை என்கிறார்கள். இதை பொறுப்பில் இருக்கும் முதலமைச்சர் விரைந்து விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் எப்படி தண்ணீர் திறந்தீர்களோ அதே போல விவசாயிகளுக்கு தேவையான நீரை வழங்குவதும் இந்த அரசின் கடமை.
சரியாக செயல்பட்டால்தான் குறுவை சாகுபடியில் நல்ல விளைச்சல் கிடைக்கும்.
மக்களின் நன்மை கருதி இந்த ஆட்சியில் மக்கள் படும் அல்லல்கள், துயரங்கள், துன்பங்கள், வேதனைகள், கஷ்டங்களை முதலமைச்சரிடம் ஊடக நண்பர்கள் கேள்வியாக கேட்டு அதன் மூலமாவது இந்த அரசு மக்களுக்கு நன்மை செய்யட்டும். முதலமைச்சரிடம் கேள்வி கேட்க பயப்படாதீர்கள்.
தக்காளி 1 கிலோ ரூ. 160-க்கும், சின்ன வெங்காயம் ரூ.150-க்கும் போய் விட்டது. இது மட்டுமல்ல பூண்டு, துவரம் பருப்பு உள்ளிட்ட எல்லா மளிகைப் பொருட்களும், ஏழை எளிய மக்கள் அன்றாடம் வாங்கி பயன்படுத்தும் உணவு பொருட்கள் அனைத்தும் 70 சதவீதம் அளவிற்கு உயர்ந்திருக்கிறது. இதை பற்றி முதலமைச்சருக்கு கவலை இல்லை. அப்படி இருக்கும் போது மாமன்னன் படம் எப்படி ஓடுகிறது என்று கேட்கிறீர்கள்.
விலைவாசியை பற்றி கேளுங்கள். மாமன்னன் திரைப்படத்தின் மூலமாக தாழ்த்தப்பட்ட மக்கள் வளர்ச்சி பெறும் வகையில் ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார். நான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அப்போதைய சபாநாயகர் தனபால் நான் பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்ற கூட்டத்தை கூட்டினார்.
நான் நிரூபிக்கின்ற போது அவர் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை இருக்கையில் இருந்து இழுத்து கீழே தள்ளி மைக், பெஞ்சை உடைத்து ரகளையில் ஈடுபட்டுஅவரது இருக்கையில் தி.மு.க.வினர் அமர்ந்தனர். இதை மறந்து விடாதீர்கள். இவர்களா தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நன்மை செய்வார்கள்?
எங்களின் உள்கட்சி பிரச்சினையை வெளியில் பேச முடியாது. கழகத்தை பலப்படுத்தி வருகிறோம். விரைவாக கழகத்தின் அனைத்து பணிகளும் நிரப்பப்படும். பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ளது. தேர்தல் வருகின்ற போது நிச்சயமாக உங்களை அழைத்து எந்தெந்த கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்று சொல்வோம்.
ஏற்கனவே நாங்கள் பா.ஜனதா பற்றி சொல்லி விட்டோம். எம்.ஜி.ஆர். ஜெயலலிதா காலத்தில் எப்படி கூட்டணி அமைத்தார்களோ அதே போல் காலம் கனிந்து வரும் போது நேரம் வரும் போது நிச்சயமாக எல்லாம் வெளிப்படையாக பேசுவோம். தேர்தலுக்கு ஓராண்டு இருப்பதால் கூட்டணி பற்றி பேச இப்போது அவசியம் இல்லை. பா.ஜனதாவுடன் உறவு எப்படி இருக்கிறது என்பதை ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டோம்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அதன் பிறகும் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
கூட்டத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.