வாணியம்பாடி அருகே மூதாட்டி அடித்துக்கொலை- போலீசார் விசாரணை
- சந்திரா பாய் தலையில் பலத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
- வேலூர் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து 2 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ராஜாபாளையம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாத் ராவ், முன்னாள் ராணுவ வீரர்.
இவரது மனைவி சந்திராபாய் (வயது 75). தம்பதியினருக்கு ரமேஷ் ராவ், சீனிவாச ராவ் என்ற மகன்களும், லட்சுமிபாய் என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஸ்வநாத்ராவ் கடந்த 2016-ம் ஆண்டு இறந்துவிட்டார். இதையடுத்து சந்திராபாய், மகள் லட்சுமி பாய் கட்டிய வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் லட்சுமி பாய் வழக்கம் போல் தனது தாய் சந்திரா பாய்க்கு இன்று காலை 7 மணி அளவில் போன் செய்தார்.
அப்போது அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த லட்சுமிபாய் உடனடியாக, அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்கள் மற்றும் அண்ணன் ரமேஷ் ராவ் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி ரமேஷ் ராவ் மற்றும் உறவினர்கள் உடனடியாக சென்று பார்த்தனர்.
அப்போது சந்திரா பாய் தலையில் பலத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சுவற்றில் ரத்த காயங்கள் இருந்தது. அவரது ஆடைகளும் கலைந்து கிடந்தது.
இது குறித்து அந்த பகுதி மக்கள் உடனடியாக வாணியம்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா, வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர்கள் ஜெய்கீர்த்தி, மங்கையர்கரசி, பேபி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. வேலூர் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து 2 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணை குறித்து அவர்கள் கூறியதாவது:-
மூதாட்டி தனியாக வசித்து வந்ததை நோட்டமிட்ட மர்மகும்பல் திட்டமிட்டு, மூதாட்டியின் தலையை சுவற்றில் மோதி கொலை செய்துள்ளனர். இறந்தகிடந்த சந்திராபாயின் பின்பக்க தலையில் ரத்தக்காயம் இருப்பதோடு, வீட்டின் சுவற்றில் ரத்தக்கரைகளும் படிந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின்பே கொலைக்கான காரணம் தெரியவரும். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.