கம்பத்தில் ஏறி இணைப்பு கொடுக்க முயன்ற விவசாயி மின்சாரம் தாக்கி பலி
- மின்வாரிய ஊழியரிடம் தன்னுடைய மின் கட்டணத்தை அபராதத்துடன் செலுத்தி விட்டேன். ஆகையால் மின் இணைப்பு கொடுங்கள் என கேட்டுள்ளார்.
- அப்பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் தற்பொழுது தான் விடுமுறையில் இருப்பதால் உடனடியாக வர முடியாது ஒரு வாரம் வரை ஆகும் என்றார்.
தொப்பூர்:
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் கோணங்கிஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 35). பட்டதாரியான இவர் தன்னுடைய இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து விவசாயம் செய்து வந்தார். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் முனுசாமி தன்னுடைய விவசாய நிலத்திற்கு விவசாயத்திற்கான பூந்தோட்ட மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி மாதா மாதம் மின்கட்டணம் செலுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக கடந்த மூன்று மாத காலமாக மின் மோட்டாரை அதிகளவில் பயன்படுத்தாமல் பூந்தோட்ட மின் இணைப்பிற்கு மின் கட்டணம் செலுத்தாமல் இருந்துள்ளார்.
அதனால் மின்வாரிய ஊழியர்கள் முனுசாமியின் தோட்டத்தில் இருந்த மின் இணைப்பினை கடந்த 20 நாட்களுக்கு முன் துண்டித்துள்ளனர். பின்னர் தன்னுடைய மின் இணைப்பிற்கான கட்டணம் மற்றும் அபராத தொகை உள்ளிட்ட அனைத்தையும் செலுத்தியுள்ளார்.
மின்வாரிய ஊழியரிடம் தன்னுடைய மின் கட்டணத்தை அபராதத்துடன் செலுத்தி விட்டேன். ஆகையால் மின் இணைப்பு கொடுங்கள் என கேட்டுள்ளார். அதற்கு அப்பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் தற்பொழுது தான் விடுமுறையில் இருப்பதால் உடனடியாக வர முடியாது ஒரு வாரம் வரை ஆகும் என்றார்.
இதனால் விவசாயி முனுசாமி மின்சார டிரான்ஸ்பார்மர் இயக்கத்தை நிறுத்திவிட்டு தன்னுடைய விவசாய நிலத்தில் உள்ள மின்கம்பத்தில் ஏறி மின் இணைப்பினை கொடுக்க முயற்சித்துள்ளார்.
அப்போது அந்த மின் இணைப்புக்கு மேலே உள்ள எச்.டி. இணைப்பை கவனிக்காததால் முனுசாமி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மின் கம்பத்திலிருந்து தூக்கி வீசப்பட்டதில் கீழே விழுந்து அவர் காயம் அடைந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.