நெல்லையில் கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவி தற்கொலை
- நாகலெட்சுமி உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
நெல்லை:
தென்காசி பண்பொழியை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகள் நாகலெட்சுமி (வயது18).
இவர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். இதனால் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் விடுதியில் தங்கி இருந்து நாகலெட்சுமி படித்தார்.
இந்நிலையில் நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்ற நாகலெட்சுமி, விடுதி அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனை அந்த அறையில் தங்கியிருந்த சக தோழிகள் இன்று காலை எழுந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் கல்லூரி விடுதி வார்டனுக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து பாளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக கல்லூரிக்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் தலைமையிலான போலீசார், நாகலெட்சுமி உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சமீபத்தில் செமஸ்டர் தேர்வு முடிவு வெளியான நிலையில் அதில் நாகலெட்சுமி சில பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் விரக்தியில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனால் தேர்ச்சி பெறாத விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.