உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் 100 டிகிரிக்கு மேல் பதிவாகும் வெயிலால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

Published On 2024-02-12 10:35 GMT   |   Update On 2024-02-12 10:35 GMT
  • கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வருகிறது.
  • பொதுமக்கள் வெளியே செல்வதில்லை. மாலை 6 மணி வரை வெயிலின் தாக்கம் உள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது. இரவு முதல் காலை 6 மணி வரை பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது.

குறிப்பாக சத்தியமங்கலம், அந்தியூர், பர்கூர், தாளவாடி போன்ற பகுதிகளில் பனியின் தாக்கம் காரணமாக வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்று வருகின்றன.

கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக ஈரோடு மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது.

பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போதே வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது.

அக்னி நட்சத்திர நாட்களில் அடிக்கின்ற வெயிலை போன்று தற்போது வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை உச்சத்தில் உள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்வதில்லை. மாலை 6 மணி வரை வெயிலின் தாக்கம் உள்ளது.

மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க கரும்பு பால், இளநீர், குளிர்பானங்களை விரும்பி பருகி வருகின்றனர். பின்னர் இரவு நேரத்தில் பனியன் தாக்கம் தொடங்கி விடுகிறது. இந்த மாறுபட்ட காலநிலை மாற்றத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல், காய்ச்சல் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர்.

Tags:    

Similar News