உள்ளூர் செய்திகள் (District)

வலுவான வேட்பாளரை நிறுத்த அ.தி.மு.க. திட்டம்- சேலத்தில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை 

Published On 2023-01-20 08:00 GMT   |   Update On 2023-01-20 08:00 GMT
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.
  • ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, கே.சி. கருப்பண்ணன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சேலம்:

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டது. த.மா.கா சார்பில் போட்டியிட்ட யுவராஜ் தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவித்ததையொட்டி, தமாகா போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் போட்டியிட உள்ளது உறுதியாகி விட்டது. இதனை தொடந்து தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளரை களம் இறக்க அ.தி.மு.க. தீவிர பணியில் இறங்கி உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, கே.சி. கருப்பண்ணன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என தெரிகிறது. மேலும் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார்? என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

காங்கிரஸை எதிர்த்து வலுவான வேட்பாளரை நிறுத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். அது தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் அவர் கருத்துக்களை கேட்டார்.

Tags:    

Similar News