ஈரோடு மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.2.25 கோடி பறிமுதல்
- உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
- கைப்பற்றப்பட்ட பணம் வியாபாரிகள் உடையது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு:
தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியான உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணங்கள் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் 24 மணி நேரமும் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று காலை வரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2 கோடியே 25 லட்சத்து 8 ஆயிரத்து 945 பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதில் ரூ.1 கோடியே 23 லட்சத்து 41 ஆயிரத்துக்கு 55 உரிய ஆவணங்கள் காட்டியதால் சம்பந்தப்பட்டவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.1 கோடியே 1 லட்சத்து 67 ஆயிரத்து 890 ரூபாய் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பறக்கும் படையினரால் பெரும்பாலும் கைப்பற்றப்பட்ட பணம் வியாபாரிகள் உடையது என்பது குறிப்பிடத்தக்கது.