உள்ளூர் செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இயல்பு நிலைக்கு திரும்பியது

Published On 2023-03-05 05:19 GMT   |   Update On 2023-03-05 05:19 GMT
  • தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் வியாபாரிகள் ஈரோட்டுக்கு வர தயக்கம் காட்டி வந்தனர். ஒரு சிலர் மட்டுமே வந்து வியாபாரம் செய்து வந்தனர்.
  • ஜவுளி மற்றும் மஞ்சள் வியாபாரம் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மந்தமாகவே காணப்பட்டது.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி மாதம் 4-ந்தேதி இறந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என ஜனவரி 18-ந்தேதி அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமுலுக்கு வந்தது. இதனால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணமின்றி பணம் கொண்டு செல்லக்கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுபாடுகளை தேர்தல் அதிகாரிகள் விதித்தனர்.

இதையடுத்து கிழக்கு தொகுதி முழுவதும் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். ஈரோடு ஜவுளி மற்றும் மஞ்சள் தொழில் நகரமாக திகழ்வதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஈரோடு வந்து ஜவுளி மற்றும் மஞ்சள் உள்பட பல்வேறு பொருட்களை வாங்கி செல்வார்கள்.

இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் வியாபாரிகள் ஈரோட்டுக்கு வர தயக்கம் காட்டி வந்தனர். ஒரு சிலர் மட்டுமே வந்து வியாபாரம் செய்து வந்தனர். இதனால் ஜவுளி மற்றும் மஞ்சள் வியாபாரம் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மந்தமாகவே காணப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி தேர்தல் முடிவுகள அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று தேர்தல் விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டது.

இதையடுத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈரோடு இயல்பு நிலைக்கு திரும்பியது. இதனால் இன்று வியாபாரிகள் பலர் வழக்கம் போல் ஈரோடு ஜவுளி சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையான ஜவுளி வகைகளை வாங்கி சென்றனர். இதே போல் மஞ்சள் வியாபாரிகளும் எப்போதும் போல் வெளிமாவட்ட மற்றும் வெளி மாவட்டங்களுக்கு மஞ்சள் வகைகளை ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.

இதனால் வியாபாரிகள், வாடிக்கையாளர்கள மற்றும் கடைக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News