பாராளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய தோல்வி அடையும்- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
- பிரதமர் மோடிக்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
- பிரதமர் மோடி, அமித்ஷா, பா.ஜ.க தலைவர்கள் வரக்கூடிய தேர்தலில் மண்ணை கவ்வுவார்கள்.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று முன்னாள் மத்திய அமைச்சரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
நாட்டில் பிரதமராக இருக்கக்கூடிய மோடி, பிரதமராக எந்த வேலையும் செய்வது கிடையாது. பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொல்வது கிடையாது. உள்நாட்டில் இருக்கின்ற பத்திரிகையாளர்களை சந்திப்பது கிடையாது. மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. அங்கே பிரதமர் செல்லவில்லை. ஆனால், பிரதமருக்கு அரசியலில் தனக்கு யார் யாரையெல்லாம் பிடிக்காதோ? அவர்கள் மீது எல்லாம் வருமான வரித்துறையையும், அமலாக்கத்துறையையும் ஏவி விட்டு நடவடிக்கை எடுக்கும் பணியை மட்டுமே செய்து வருகிறார்.
அதன் ஒரு அங்கமாக தான் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் ரெய்டில் ஈடுபட்டு, அவரை அழைத்து பொய் விசாரணை நடத்தி வருகின்றனர். பயமுறுத்துவதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்கி விடலாம், தோற்கடித்து விடலாம் என நினைக்கும் பிரதமர் மோடிக்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் அவருக்கு பாடம் புகட்டுவார்கள். ராணுவம் அல்லது வருமான வரித்துறை மூலம் மிரட்டி பணிய வைக்கலாம் என பிரதமர் மோடி நினைக்கிறார். கண்டிப்பாக இது நடக்காது. பிரதமர் மோடி, அமித்ஷா, பா.ஜ.க தலைவர்கள் வரக்கூடிய தேர்தலில் மண்ணை கவ்வுவார்கள்.
தற்போது அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரை அமலாக்கத்துறை அநாவசியமாக பிடித்து விசாரித்து கொண்டு இருக்கிறதோ அதேபோல் மத்தியில் ஆட்சி மாறிய உடன் கண்டிப்பாக மோடி, அமித்ஷா, அவர்களுக்கு வேண்டியவர்களும் கம்பிகளுக்கு பின்னால் போவார்கள் என்பது உறுதி. புலியை பார்த்து பூனை கோடு போட்டு கொண்டது என சொல்வார்கள்.
அதைப்போல காங்கிரஸ் கட்சியும், தோழமை கட்சிகளும் பெங்களூரில் கூட்டம் நடத்தி வருகின்றனர். அதைப்பார்த்து பா.ஜ.க.வினரும் அவர்களது தோழமை கட்சிகளுடன் கூட்டம் போட்டுள்ளனர். அங்கு இருக்கிற நபர்கள் யாரேன்று பார்த்தால், தொண்டானாகவும், தலைவராகவும் இருக்கிற ஜி.கே.வாசனை போன்றவர்கள் தான். ஜி.கே.வாசன் காங்கிரஸ் மற்றும் மற்ற கட்சிகள் நடத்துகிற அளவுக்கு கூட்டம் நடத்த முடியாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் இருக்கிற கூட்டணி மிகப்பெரிய தோல்வி அடையும். தமிழக அரசின் தலைமை செயலகத்தி ல் அமலாக்கத்துறை சோதனை நடத்த போலீசாரும், அரசும் அனுமதிக்க கூடாது. அரசு தலைமை அலுவலகத்தில் சோதனை செய்வது சட்டத்திற்கு புறம்பானது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமை மற்றும் வழிகாட்டுதலின்பேரில் நாட்டில் இருக்கின்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து மதவாத மற்றும் சர்வாதிகாரியான மோடியை கண்டிப்பாக தோற்கடிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.