உள்ளூர் செய்திகள்

தேன்கனிக்கோட்டையில் ஒற்றை யானை தாக்கி விவசாயி பலி

Published On 2024-05-02 07:07 GMT   |   Update On 2024-05-02 07:07 GMT
  • அப்பைய்யா யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது.
  • தேன்கனிக்கோட்டை பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை யானையை கர்நாடகா மாநில வனப்பகுதியில் விரட்டியக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மேடுமுத்துகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அப்பைய்யா (வயது55). விவசாயியான இவருக்கு நாகம்மா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் அப்பைய்யா இன்று அதிகாலை வழக்கம்போல் தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக கிணற்றில் மின்மோட்டாரை ஆன் செய்வதற்காக சென்றார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த ஒற்றை யானை ஒன்று வேகமாக வந்து அப்பைய்யாவை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சத்தம் போட்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்த ஒற்றை யானையை விரட்டினர்.

பின்னர் காயமடைந்த அப்பைய்யாவை மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.

இதற்கிடையே அப்பைய்யா யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன் ஆகியோர் யானை தாக்கி உயிரிழந்த அப்பைய்யாவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. சாந்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி, ஜவளகிரி வனச்சரகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து அப்பைய்யாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டை பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை யானையை கர்நாடகா மாநில வனப்பகுதியில் விரட்டியக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டியடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News