காஞ்சிபுரத்தில் விவசாயி கல்லால் தாக்கி படுகொலை
- பெருமாள் தனக்கு விற்ற நிலத்தை புறம்போக்கு நிலம் என்று கூறியதாலும், வீடு கட்டவிடாமல் தடுத்ததாலும் மதன் ஆத்திரம் அடைந்தார். அங்கிருந்த கல்லை எடுத்து பெருமாளை தாக்கினார்.
- பெருமாள் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து மதன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த கோளிவாக்கம் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 70). விவசாயி. வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள், 1 மகன் உள்ளனர்.
பெருமாள் சில வருடங்களாக தனியாக வசித்து வந்தார். பெருமாள் அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான ஒரு நிலத்தை உத்திரமேரூர் மருதம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மதன் என்பவருக்கு விற்றார்.
மதனின் மனைவி கோளிவாக்கத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த நிலத்தில் வீடு கட்ட மதன் முடிவு செய்தார். இதற்காக கல், மண் போன்றவற்றை அங்கு இறக்கினார்.
இன்று காலையில் அங்கு வந்த பெருமாள், இது புறம்போக்கு நிலம். இதில் வீடு கட்டக்கூடாது என்று மதனிடம் கூறினார்.
பெருமாள் தனக்கு விற்ற நிலத்தை அவரே புறம்போக்கு நிலம் என்று கூறியதாலும், வீடு கட்டவிடாமல் தடுத்ததாலும் மதன் ஆத்திரம் அடைந்தார். அங்கிருந்த கல்லை எடுத்து பெருமாளை தாக்கினார்.
இதில் பெருமாள் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து மதன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், டி.எஸ்.பி. ஜூலியர் சீசர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
இதுதொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.