விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் மனு அளிக்க வந்த விவசாயி திடீர் மரணம்
- கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து வந்தனர்.
- கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த விவசாயி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து வந்தனர்.
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குமாரக்குடியை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 70), விவசாயி. இவர் இன்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்திற்கு மனு அளிப்பதற்காக வந்திருந்தார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் மனு எழுதிவிட்டு, அதனை நகல் எடுப்பதற்காக சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார்.
இது பற்றி அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் உடனே ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ராஜதுரை, கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜதுரை இறந்து விட்டதாக தெரிவித்தனர். கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த விவசாயி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.