உள்ளூர் செய்திகள்

பாண்டி

கோர்ட்டு உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லாததால் போலீஸ் நிலையம் முன் விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2023-02-09 08:58 GMT   |   Update On 2023-02-09 08:58 GMT
  • போலீஸ் நிலையம் முன்பு விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • சதீஸ்கண்ணன் கொடுத்த புகாரின்பேரில் சங்கர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

கொடைரோடு:

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகில் உள்ள பொட்டிசெட்டிபட்டி கன்னிமார்நகரை சேர்ந்த பாண்டி மகன் சதீஸ்கண்ணன்(23). இவர் பள்ளபட்டியில் உள்ள சிப்காட்டில் வேலைபார்த்து வந்தார். இவர் தனக்கு சொந்தமான தோட்டத்திற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ந்தேதி சென்றபோது அதேபகுதியை சேர்ந்த சங்கர், நாச்சியப்பன், சின்னக்கருப்பு மற்றும் சிலர் அவரிடம் தகாத வார்த்தைகளால் திட்டி நிலத்தை அபகரிக்கும் தோணியில் பேசி வந்தனர்.

மேலும் குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் புகார் மனு அளித்தார். இதனைதொடர்ந்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் கோர்ட்டு உத்தரவிட்டும் எந்தவித நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை. இதனால் பாண்டி(50) அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து தனது புகார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டவாறே தான் கொண்டுவந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் பாண்டியை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் சதீஸ்கண்ணன் கொடுத்த புகாரின்பேரில் சங்கர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். போலீஸ் நிலையம் முன்பு விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News