உரிய காவிரி நீர் வழங்கக்கோரி நெற்பயிர்களுக்கு திதி கொடுத்து விவசாயிகள் நூதன போராட்டம்
- நெற்பயிர்களுக்கு தேங்காய், காய்கறிகள், பழம் உள்ளிட்டவற்றால் படையலிட்டு திதி கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- காவிரி நீர் வழங்காத கர்நாடகா அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் கருகி வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற கர்நாடகாவிடம் இருந்து உரிய காவிரி நீர் பெற்றுதரக்கோரி விவசாய சங்க நிர்வாகி கக்கரை சுகுமாறன் மற்றும் ஏராளமான விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து விட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.
அங்கு நெற்பயிர்களுக்கு தேங்காய், காய்கறிகள், பழம் உள்ளிட்டவற்றால் படையலிட்டு திதி கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக விவசாயி ஒருவர் மந்திரங்கள் ஓதி திதி கொடுத்தார்.
அப்போது காவிரி நீர் வழங்காத கர்நாடகா அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.