விளை நிலங்களுக்குள் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு
- வாழைகளை நோக்கி வந்த யானையை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
- யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் மலையடி வாரத்தில் கடந்த 3 மாதமாக ஒற்றை யானை முகாமிட்டு, விவசாய பயிர்களை துவம்சம் செய்து வருகின்றன.
காட்டு பத்து, மேலகாடு விளைநிலங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள வாழை, நெல், தென்னை, பனை மரங்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மாலையில் ஒற்றை யானை மீண்டும் விளைநிலங்களுக்குள் புகுந்தது. வாழைகளை நோக்கி வந்த யானையை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் சுதாரித்து கொண்டு விவசாயிகள் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இதைக்கண்ட யானையும் சற்று பின்வாங்கியது. உடனடியாக விவசாயிகள் உயிரை பணயம் வைத்து பட்டாசுகள் வெடித்தும், சத்தங்கள் எழுப்பியும் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து யானை அங்கிருந்து சென்றது.
இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், ஒற்றை யானை தினசரி விளைநிலங்களில் நுழைகிறது. எங்கள் பயிரை காப்பாற்ற உயிரை பணயம் வைத்துள்ளோம். யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. யானையிடமிருந்து பயிர்களையும், உடமைகளையும் காப்பாற்ற முடியாமல் திணறி வருகிறோம்.எனவே அச்சுறுத்தி வரும் ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.