உள்ளூர் செய்திகள் (District)

பெண் குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விற்க முயன்ற தந்தை கைது

Published On 2024-09-25 08:38 GMT   |   Update On 2024-09-25 08:38 GMT
  • சேலத்தில் உள்ள குழந்தைகள் நல ஆணையத்தை தொடர்பு கொண்டு தகவல் கூறி உள்ளார்.
  • குழந்தைகளை விற்பனை செய்த விவரம் குறித்தும், அதற்கு துணையாக செயல்பட்ட புரோக்கர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எடப்பாடி:

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட சித்தூர் கிராமம், திம்பத்தியான் வளவு பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு (32). கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி. இவரது மனைவி குண்டுமல்லி இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இதுவரை இவர்கள் 6 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.

சேட்டு-குண்டுமல்லி தம்பதிக்கு அண்மையில் 6-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண் குழந்தையை சேட்டு புரோக்கர்கள் மூலம் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்ய முயற்சி செய்து உள்ளார். ஆனால் அவர் இந்த குழந்தையை சட்டபூர்வமாகவே தான் தத்தெடுக்க முடிவு செய்துள்ளதாக கூறி, சேலத்தில் உள்ள குழந்தைகள் நல ஆணையத்தை தொடர்பு கொண்டு தகவல் கூறி உள்ளார்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சேட்டுவை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, ஏற்கனவே தனக்கு பிறந்த 2 ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தையை தலா ரூ. 1 லட்சத்துக்கு புரோக்கர்கள் மூலம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்ததும், தற்போது பிறந்த பெண் குழந்தையை குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவருக்கு 1 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சித்த போது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதனை அடுத்து சேட்டுவை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவர்கள் குழந்தைகளை விற்பனை செய்த விவரம் குறித்தும், அதற்கு துணையாக செயல்பட்ட புரோக்கர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News