கல்குவாரியில் தேங்கி கிடந்த தண்ணீரில் மூழ்கி 2 வாலிபர்கள் பலி
- 2-வது நாளாக மீண்டும் தீயணைப்புத் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருங்கல்:
புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியில் கல்குவாரி ஒன்று உள்ளது. இந்த கல்குவாரி தற்போது செயல்படாமல் மூடப்பட்டு உள்ளது. கல்குவாரியில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.
அந்த பகுதியில் இளைஞர்கள் அவ்வப்போது சென்று குளித்து வந்தனர். பனங்காலைமுக்கு பகுதியை சேர்ந்த ஜெகன் (வயது 35). அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ராஜேஷ் (38). இருவரும் நேற்று மாலை கல்குவாரியில் தேங்கி கிடந்த தண்ணீரில் குளிக்க சென்றனர். அவர்கள் குளித்து கொண்டிருந்தபோது திடீரென தண்ணீரில் மூழ்கினார்கள்.
இது தொடர்பாக அவரது உறவினர்களுக்கு தெரியவந்தது. பொதுமக்களும் அந்த பகுதியில் திரண்டனர். இதுகுறித்து புதுக்கடை போலீசாருக்கும், குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் ஜெகன், ராஜேஷ் குறித்து எந்த தகவல் கிடைக்கவில்லை. இரவு இருள் சூழ்ந்து விட்டதையடுத்து தேடும்பணி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை 2-வது நாளாக மீண்டும் தீயணைப்புத் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஜெகன், ராஜேஷ் இருவரும் பிணமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட இருவரையும் தீயணைப்பு வீரர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்குவாரியில் குளிக்க சென்ற இடத்தில் நண்பர்கள் 2 பேர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.