உள்ளூர் செய்திகள்

தரைபாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து தடைப்பட்டது

Published On 2023-12-02 09:10 GMT   |   Update On 2023-12-02 09:10 GMT
  • கடந்த சில நாட்களாக பெய்த பருவ மழையின் காரணமாக பாலேஸ்வரம் அணைக்கட்டு நிரம்பி உள்ளது.
  • கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதியைச் சேர்ந்த காரணி ஊராட்சியில் இருந்து கொசவன்பேட்டை ஊராட்சியைச் சேர்ந்த அஞ்சாதம்மன் கோவில் பகுதிக்கு வருவதற்கு ஆரணி ஆற்றின் குறுக்கே தரைப் பாலம் ஒன்று உள்ளது. இந்த தரை பாலத்தின் வழியாக எருக்குவாய், நெல்வாய், எருக்குவாய் கண்டிகை, முக்கரம்பாக்கம், சந்திராபுரம், மங்களம், பாலேஸ்வரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருவார்கள்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த பருவ மழையின் காரணமாக பாலேஸ்வரம் அணைக்கட்டு நிரம்பி உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் காரணி-அஞ்சாதம்மன் கோவில் இடையில் ஆரணி ஆற்றில் உள்ள தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியது. மேலும், ஆரணி சமுதாயக் கூடம் எதிரில் இருந்து மங்களம் கிராமத்திற்கு செல்லும் வழியில் ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள நடைபாதையும் வெள்ள நீரில் மூழ்கியது. இதனால் இப்பகுதியில் ஆபத்தையும் உணராமல் கிராம மக்கள் சிலர் கடந்து சென்று வருகின்றனர்.

பெரியபாளையம் மற்றும் ஆரணி போலீசார் இப்பகுதிகளில் தடுப்புகளை அமைத்து போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளனர்.

இதனால் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு பெரியபாளையம் வழியாக சென்று வருகின்றனர்.

Tags:    

Similar News