உள்ளூர் செய்திகள்

கோபிசெட்டிபாளையம் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.3 லட்சம் பறிமுதல்

Published On 2024-03-22 04:58 GMT   |   Update On 2024-03-22 04:58 GMT
  • காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
  • கோபி பகுதியில் ஒரு நாளில் மட்டும் ரூ.3 லட்சத்து 2 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோபி:

பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்லப்படும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் எடுத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் பிரிவில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் ரூ. 1 லட்சத்து 44 ஆயிரத்து 656 பணம் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து காரில் வந்தவரிடம் விசாரித்த போது அவர் கோபி அருகே உள்ள சிறுவலூர் பகுதியை சேர்ந்த வெள்ளையங்கிரி (59) என்பது தெரிய வந்தது. அவரிடம் பணத்திற்குரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கோபி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணப்பனிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் கோபி அருகே உள்ள சிறுவலூர் மணியக்காரன் புதூர் என்ற இடத்தில் தேர்தல் கண்காணிப்பு நிலை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ.64,000 பணம் இருந்தது.

சிவகிரியில் இருந்து வந்த விவசாயி துரைசாமி என்பவர் கவுந்தப்பாடியில் டிராக்டர் வாங்குவதற்காக பணம் கொண்டு வந்ததாக தெரிவித்தார். ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்த கண்காணிப்பு நிலை குழுவினர் கோவில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணப்பனிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் கோபி அருகே உள்ள கோவை பிரிவில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் ரூ.98 ஆயிரத்து 500 இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் தவிட்டுபரம்பில் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (55) என்பதும், ஈரோட்டில் இருந்து வாழைத்தார் வாங்கி செல்வதற்காக பணத்துடன் வந்திருப்பதும் தெரிய வந்தது.

எனினும் அந்த பணத்திற்குரிய ஆவணம் இல்லாததால் அவரிடமிருந்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து கோபி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். கோபி பகுதியில் ஒரு நாளில் மட்டும் ரூ.3 லட்சத்து 2 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News