உள்ளூர் செய்திகள்

6 கோவில்களில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல்- அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

Published On 2024-02-09 10:27 GMT   |   Update On 2024-02-09 10:27 GMT
  • கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
  • மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் சிவக்குமார், உதவி ஆணையர்கள் சாமிநாதன், அன்னக்கொடி கலந்து கொண்டனர்.

சென்னை:

இந்து சமய அறநிலையத்துறை, தனது நிர்வாகக்கட்டுப்பாட்டில் உள்ள தொன்மையான கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், குடமுழுக்குகள் நடத்துதல், புதிய ராஜகோபுரங்களை கட்டுதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் , வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று ஈரோடு மாவட்டம், திண்டல் வேலாயுத சுவாமி கோவில் வளாகத்தில் அக்கோவிலுக்கு ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் புதிய ஐந்து நிலை ராஜகோபுரம், சென்னிமலை, சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ. 93 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள பசுமடம், தங்கமேடு, தம்பிக்கலை அய்யன் சுவாமி கோவிலில் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் வணிக வளாகம், பவானி சங்க மேஸ்வரர் கோவிலில் ரூ. 51 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் யானை மணிமண்டபம் மற்றும் ரூ. 34.50 லட்சம் மதிப்பீட்டிலான பணியாளர் குடியிருப்பு மராமத்துப் பணிகள், அந்தியூர், செல்லீஸ்வரர் கோவிலில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் மதில் சுவர் கட்டும் பணி என மொத்தம் 5 கோவில்களில் ரூ. 4.76 கோடி மதிப்பீட்டிலான 6 திருப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தனர்.

இப்பணிகளில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டிலான பணி உபயதாரர் நிதியின் மூலமாகவும், ரூ. 2.65 கோடி மதிப்பீட்டிலான பணிகள் அந்தந்த கோவில் நிதியின் மூலமாகவும் மேற்கொள்ளப் படுகின்றன. நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, அந்தியூர் எம்.பி.எம்.எல்.ஏ.க்கள் ப.செல்வராஜ் ஏ.ஜி.வெங்கடாசலம், டாக்டர் சி. சரஸ்வதி, ஈரோடு மாநகராட்சி மேயர் சு. நாகரத்தினம், ஈரோடு மண்டல இணை ஆணையர் அ.தி. பரஞ்சோதி, துணை ஆணையர் ரா.மேனகா, மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் சிவக்குமார், உதவி ஆணையர்கள் சாமிநாதன், அன்னக்கொடி கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News