சித்தோட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் கஞ்சா விற்ற தம்பதி கைது
- பவானி காலிங்கராயன் பாளையம் பகுதியில் வாலிபர்களுக்கு கஞ்சா பொட்டலம் தயாரித்த போது போலீசில் சிக்கியது தெரியவந்தது.
- விஜயன், பவித்ரா மீது கொலை வழக்கு இருப்பதும், இது தவிர விஜயன்மீது கஞ்சா மற்றும் 18 அடிதடி வழக்குகள் இருப்பதும்தெரியவந்தது.
சித்தோடு:
ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன் பாளையம் மாட்டு ஆஸ்பத்திரி அருகே ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அந்த வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டில் ஒரு பெண் உள்பட 4 பேர் இருந்தனர். போலீசாரை பார்த்ததும் அந்த பெண் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 300 கிராம் எடை கொண்ட 42 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது.
இதையடுத்து போலீசார் அங்கு இருந்த நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சரவணா தியேட்டர் பகுதியை சேர்ந்த சரவணன் (24), பவானி காலிங்கராயன் பாளையம் என்.எஸ்.எம்.வீதியை சேர்ந்த மெய்யப்பன் (24). சித்தார் குப்பிச்சி பாளையத்தை சேர்ந்த அஜித் (24) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது தப்பி ஓடியது பவானி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஆற்றோரம் பகுதியை சேர்ந்த விஜயன் என்பவரது மனைவி மகேஸ்வரி என்கிற பவித்ரா (24) என்று தெரியவந்தது.
இதையடுத்து சித்தோடு போலீசார் பவித்ராவை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது அங்கு இருந்த அவரது கணவர் விஜயன் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.
இதையடுத்து போலீசார் விஜயன் மற்றும் அவரது மனைவி பவித்ரா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதுப்பற்றிய விபரம் வருமாறு:-
விஜயன் அவரது மனைவி பவித்ரா ஆகிய 2 பேரும் ஈரோடு மாவட்டம் பவானி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், சேலம் மாவட்டம் சங்ககிரி புள்ளா கவுண்டன்பட்டி ஆகிய இடங்களில் வீடு வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் கஞ்சா விற்பனை செய்து உள்ளனர். இதற்காக இவர்கள் 2 நாட்களுக்கு ஒரு முறை அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று கஞ்சாவை பொட்டலங்களாக தயாரித்து அவர்களுக்கு கொடுத்து வந்தது தெரியவந்துது.
இதேபோல தான் பவானி காலிங்கராயன் பாளையம் பகுதியில் வாலிபர்களுக்கு கஞ்சா பொட்டலம் தயாரித்த போது போலீசில் சிக்கியது தெரியவந்தது.
மேலும் விஜயன், பவித்ரா மீது கொலை வழக்கு இருப்பதும், இது தவிர விஜயன்மீது கஞ்சா மற்றும் 18 அடிதடி வழக்குகள் இருப்பதும்தெரியவந்தது. மேலும் விஜயன் குண்டர் சட்டத்தில் கைதாகி விடுதலை ஆனதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.