வீட்டில் விளையாடியபோது பாத்திரத்திற்குள் சிக்கிய சிறுமி
- பெற்றோர் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
- வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை பாத்திரத்தில் மாட்டிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த தண்ணீர் பந்தலை சேர்ந்தவர் பூபதி, கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி புத்திப்பிரியா என்ற மனைவியும், 2 வயதில் மிதுளாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.
நேற்று மிதுளாஸ்ரீ வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள். அருகில் சில்வர் தண்ணீர் பாத்திரம் இருந்தது. இந்த சில்வர் பாத்திரத்திற்குள் சிறுமி இறங்கினாள். அப்போது எதிர்பாராத விதமாக மிதுளாஸ்ரீ உள்ளே மாட்டிக் கொண்டார்.
பாத்திரத்தில் இருந்து வெளியே வர முடியாமல் கதறி அழுதது. அழுகுரல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர், குழந்தை சில்வர் பாத்திரத்திற்குள் மாட்டியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அவர்கள் குழந்தையை வெளியே எடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இது குறித்து பெற்றோர் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில், நிலைய அலுவலர் (பொறுப்பு) ரமேஷ் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பாத்திரத்தில் மாட்டியிருந்த குழந்தையின் தலையை வெளியே எடுக்க முயன்றனர்.
பின்னர் கட்டிங் எந்திரத்தைகொண்டு பாத்திரத்தை இரண்டாக வெட்டி பிளந்து சிறுமியை பத்திரமாக மீட்டனர்.
வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை பாத்திரத்தில் மாட்டிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.