உள்ளூர் செய்திகள்

கேமரா மீது மிதியடி போட்டுள்ளதையும் படத்தில் காணலாம்.


மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் கொள்ளை

Published On 2023-12-19 05:18 GMT   |   Update On 2023-12-19 05:18 GMT
  • வீட்டில் உள்ள அறையில் பீரோ திறக்கப்பட்டு துணிமணிகள் பொருட்கள் சிதறி கிடந்தன.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபி:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கிருஷ்ணன் வீதியை சேர்ந்தவர் சரோஜா (71). கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் ஜெகதீஷ் இறந்து விட்டார். சரோஜா வீடு அருகே அவரது மகள் வீடும் உள்ளது. சரோஜா வீட்டில் தனியாக வசித்தாலும் இரவு நேரத்தில் மகள் வீட்டில் சாப்பிட்டு தூங்குவது வழக்கம்.

அதைபோல் நேற்று இரவும் வழக்கம்போல் மகள் வீட்டில் சாப்பிட்டு அங்கேயே தூங்கிவிட்டார். இன்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கீழே கிடந்தது. மேலும் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் ரோட்டில் இருந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த சரோஜா வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் பீரோ திறக்கப்பட்டு துணிமணிகள் பொருட்கள் சிதறி கிடந்தன.

பீரோவில் இருந்த வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தது. பணம், நகை இல்லாததால் தப்பியது. நள்ளிரவில் வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் சி.சி.டி.வி. பொருத்தப்பட்டிருந்ததால் முகம் தெரியாமல் இருப்பதற்காக கால் மிதியடியை கேமிராவில் மேல் போட்டு முடிவு உள்ளனர்.

இதுகுறித்து கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேப்போல் கோபி ஈஸ்வரன் கோவில் எதிரே உள்ள பானுமதி என்பவர் வீட்டில் ஆளில்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். ஆனால் பணம், நகை, வெள்ளி பொருட்கள் எதுவும் இல்லாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று விட்டனர்.

இது குறித்தும் கோபி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News