திருச்சி அருகே விபத்து: அரசு பஸ் மோதி 10-ம் வகுப்பு மாணவர் மரணம்
- விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மண்ணச்சநல்லூர் போலீசார் விரைந்து சென்று இறந்த சாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மண்ணச்சநல்லூர்:
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள காளவாய்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் சாரதி (வயது 15). திருவெள்ளறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று பள்ளிக்கு விடுமுறை நாளாகும்.
இந்தநிலையில் இன்று காலை 10 மணியளவில் சாரதியின் அண்ணன் சுபாஸ் (29), அவரது நண்பர் சரத் (27) ஆகியோருடன் சாரதி ஆகிய மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் திருவெள்ளறையில் இருந்து மண்ணச்சநல்லூரில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு புறப்பட்டனர். அவர்கள் மண்ணச்சநல்லூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
சாரதி இருசக்கர வாகனத்தின் நடுவில் அமர்ந்திருந்தார். அவரது அண்ணன் சுபாஸ் வாகனத்தை ஓட்டினார். திருவெள்ளறை அருகில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது எதிரே திருச்சியில் இருந்து துறையூர் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்றது.
இதில் எதிர்பாராதவிதமாக அரசு பஸ் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் 3 பேரும் கீழே விழுந்தனர். அடுத்த விநாடி அதே பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய சாரதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். மற்ற இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மண்ணச்சநல்லூர் போலீசார் விரைந்து சென்று இறந்த சாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இன்று காலை நடந்த இந்த விபத்து பலியான சாரதியின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.