திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் போராட்டம்
- திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.
திருவள்ளூர்:
ஆர்.கே.பேட்டை அருகே உள்ள ராஜாநகரம் பகுதியில் நிலப்பிரச்சினை தொடர்பாக மறியல் போராட்டம் நடைபெற்றது.
அவர்களிடம் தாசில்தார் தமயந்தி, ஆர்.கே.பேட்டை குறுவட்ட வருவாய் ஆய்வாளர் ஜெயலட்சுமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வருவாய்த்துறை அதிகாரிகளை சிலர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி தப்பி சென்று விட்டனர்.
இதில் வருவாய்த்துறை அலுவலர்கள் பலத்த காயம் அடைந்தனர். ஆனால் இதுவரை வருவாய்த்துறை அலுவலர்களை தாக்கியவர்கள் கைது செய்யப்படவில்லை. இதனை கண்டித்து நேற்று மாலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயகர்பிரபு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாண்டுரங்கன், மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வருவாய்துறை அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், வருவாய்த் துறை அலுவலர்களை தாக்கிய மர்ம நபர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டுமென கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசை நேரில் சந்தித்து அளித்தனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்து உள்ளார்.