உள்ளூர் செய்திகள்

காரில் 80 கிலோ குட்காவை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநில வாலிபர்கள் 2 பேர் கைது

Published On 2024-03-06 04:55 GMT   |   Update On 2024-03-06 04:55 GMT
  • கடைகளில் அவ்வப்போது சென்று சோதனை செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பவானி:

ஈரோடு மாவட்டத்தில் சமீபகாலமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் புழக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.

இதன் பேரில் மாவட்ட முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடைகளில் அவ்வப்போது சென்று சோதனை செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே நசியனூர் ரவுண்டானா பகுதியில் சித்தோடு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாசம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது காரின் உள்ளே மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து காரில் இருந்த 2 வாலிபர்களை விசாரணைக்காக சித்தோடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அசோக் குமார் (34) மற்றும் கோவில் (28) என தெரிய வந்தது. 2 பேரும் தற்போது ஈரோடு கொல்லம்பாளையம் இந்திரா நகர் பகுதியில் வாடகை குடியிருந்து வந்ததும் தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெங்களூரில் இருந்து கார் மூலமாக குட்கா பொருட்கள் கொண்டு வந்து ஈரோடு, பெருந்துறை, பவானி உட்பட பல்வேறு ஊர்களில் உள்ள சின்ன, சின்ன வியாபாரிகளுக்கு விற்றது தெரியவந்தது. காரில் மொத்தம் 80 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.70 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 80 கிலோ குட்கா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News