நம்பியூர் பகுதியில் பலத்த மழை- 2-வது முறையாக தரைப்பாலம் மூழ்கியது
- பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
- தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 66 ஏக்கர் பரப்பளவிலான குளம் உள்ளது. கடந்த சில நாட்களாக ஈரோடு, திருப்பூர் மாவட்ட எல்லை பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் தத்தனூர், புஞ்சை தாமரைக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் வேமாண்டம் பாளையம் குளத்துக்கு அதிக அளவில் தண்ணீர் வந்தது.
இதனால் வேமாண்டம்பாளையம் குளம் இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பி உபரிநீர் வெளியேறியதுடன், அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் நம்பியூர்-புஞ்சைபுளியம்பட்டி சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
மேலும் இரவு கனமழை பெய்தால் சேதம் ஏற்படாமல் இருக்க நம்பியூர் தாசில்தார் ஜாகிர் உசேன், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் லோகநாயகி மற்றும் வரப்பாளையம் போலீசார் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.