ஏற்காட்டில் கடும் குளிர், பனி மூட்டம்- ஸ்வெட்டர் விற்பனை மும்முரம்
- அதிக குளிர் மற்றும் பனி காரணமாக வடமாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ஏற்காட்டில் ஸ்வெட்டர், மப்ளர் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.
- பொதுமக்களும், பயணிகளும் ஸ்வெட்டர் உள்ளிட்ட ஆடைகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
சேலம்:
சுற்றுலா தலங்களில் பிரசித்தி பெற்ற ஏற்காட்டில் வானுயர்ந்த மரங்கள், காபி செடிகள், அரியவகை தாவரங்கள், உள்ளன. இங்கு கிளியூர் நீர்வீழ்ச்சி, பூங்கா, பரந்த ஏரி என பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதை காண தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இந்த நிலையில் ஏற்காட்டில் கடந்த ஒருவார காலமாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. தினமும் காலை 11 மணி வரை பனி மூட்டம் காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கி கிடக்கின்றனர். பனி மூட்டம் காரணமாக காலை நேரங்களில் வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சாலையில் மெல்ல ஓட்டிச் செல்கின்றனர்.
பகலில் பனிப்பொழிவு அதிகரிப்பால் சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும், சாலையோரக் கடைகளிலும், வர்த்தக நிறுவனங்களிலும் மக்கள் கூட்டமின்றி உள்ளது. வெளியூர் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் நிலவும் பனிப்பொழிவு மற்றும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதிக குளிர் மற்றும் பனி காரணமாக வடமாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ஏற்காட்டில் ஸ்வெட்டர், மப்ளர் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களும், பயணிகளும் ஸ்வெட்டர் உள்ளிட்ட ஆடைகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.