சென்னிமலை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல்
- மேற்கு ராஜ வீதி வழியாக வடக்கு நோக்கி வரும் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கிறது.
- பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னிமலை:
சென்னிமலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் தென் மாவட்டங்களுக்கும், அதேபோல் அங்கிருந்து வரும் லாரிகள் வட மாநிலங்களுக்கும் சென்று வருகிறது. இதனால் எப்போதும் சென்னிமலை நகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது உண்டு.
சென்னிமலை பஸ் நிலையத்தை கடந்து பெருந்துறை மற்றும் வெள்ளோடு ரோடு வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் தெற்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி வழியாக குமரன் சதுக்கத்தை அடைந்து செல்லும் வகையில் ஒரு வழி பாதையாக உள்ளது. அதேபோல் குமரன் சதுக்கம் வழியாக பஸ் நிலையம் நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் வடக்கு ராஜ வீதி மற்றும் கிழக்கு ராஜ வீதி வழியாக செல்லும் வகையில் ஒரு வழி பாதையாக உள்ளது.
ஆனால் சென்னிமலை முருகன் கோவிலுக்கு கார்களில் வரும் பக்தர்கள் வடக்கு ராஜ வீதி மற்றும் தெற்கு ராஜ வீதி வழியாக பார்க் ரோட்டை அடைந்து முருகன் கோவிலுக்கு செல்லாமல் குமரன் சதுக்கத்தில் இருந்து ஒரு வழிப்பாதையாக உள்ள மேற்கு ராஜவீதி வழியாக நுழைகின்றனர்.
இதனால் மேற்கு ராஜ வீதி வழியாக வடக்கு நோக்கி வரும் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கிறது. குறிப்பாக செவ்வாய்க்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் நூற்றுக்கணக்கான கார்களில் சென்னிமலை முருகன் கோவிலுக்கு வருவது உண்டு. அப்போது ஒரு வழிப்பாதையான மேற்கு ராஜ வீதி வழியாக கார்கள் நுழைவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
தினமும் காலை நேரங்களில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி செல்லும் வாகனங்கள் மேற்கு ராஜ வீதி வழியாக செல்லும்போது மலைக்கோவிலுக்கு செல்லும் வாகனங்கள் எதிரே வருவதால் மேற்கொண்டு செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மாலை நேரத்திலும் இதே பிரச்சனை தான் ஏற்படுகிறது.
சென்னிமலை போலீஸ் நிலையத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திலேயே மேற்கு ராஜ வீதி இருப்பதால் குமரன் சதுக்கத்தில் இருந்து மேற்கு ராஜ வீதி வழியாக கார்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் எதுவும் செல்லாமல் இருக்க போலீசார் அங்கு கண்காணித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். மேலும் கனரக வாகனங்கள் நகருக்குள் வரால் இருக்க புற வழி சாலை ரிங் ரோடு அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.