காணும் பொங்கலில் குவிந்த கூட்டம்- ஒரே நுழைவு சீட்டு நடைமுறையால் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்
- கடந்த 2 நாட்களாக அனைத்து வனத்துறை சுற்றுலா தளங்களுக்கும் செல்ல ஒரே கட்டணம் ஒரே நுழைவுச்சீட்டு என பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களுக்கு ரூ.15, கேமராவுக்கு ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- கோசன் ரோடு வனத்துறை சோதனை சாவடியில் கட்டணம் வாங்கப்படுகிறது.
கொடைக்கானல்:
தொடர் விடுமுறையின் காரணமாக கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. காணும் பொங்கல் தினமான இன்று அனைத்து சுற்றுலாத்தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
மோயர்சதுக்கம், பைன் மரச்சோலை, தூண்பாறை, கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரிப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். நட்சத்திர ஏரியில் படகு சவாரி, ஏரிச்சாலை பகுதிகளில் சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர். இதன் காரணமாக கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து காவலர்கள் பற்றாக்குறையால் உள்ளூர் டாக்ஸி ஓட்டுனர்களே ஏரிச்சாலை பகுதிகளில் போக்குவரத்தை சீர் செய்து போக்குவரத்து நெரிசலை குறைத்தனர். கொடைக்கானல் பொதுமக்களின் நீண்ட ஆண்டு கோரிக்கையான போக்குவரத்துக் காவலர்களை அதிக அளவில் நியமிப்பது என்ற கோரிக்கை எட்டாக்கனியாகவே உள்ளது.
மேலும் தொடர் விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு அதிக அளவில் போக்குவரத்துக் காவலர்களை அனுப்பி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் பேரிஜம், மோயர் சதுக்கம், பைன் மரச்சோலை, தூண்பாறை, குணா குகை போன்ற சுற்றுலாத்தலங்கள் உள்ளன. இப்பகுதிகளில் டிக்கெட் கட்டணம் நீண்ட காலமாக அந்தந்த பகுதிகளில் வசூல் செய்யப்பட்டது.
கடந்த 2 நாட்களாக அனைத்து வனத்துறை சுற்றுலா தளங்களுக்கும் செல்ல ஒரே கட்டணம் ஒரே நுழைவுச்சீட்டு என பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களுக்கு ரூ.15, கேமராவுக்கு ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோசன் ரோடு வனத்துறை சோதனை சாவடியில் இந்த கட்டணம் வாங்கப்படுகிறது.
இதன் காரணமாக மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒவ்வொரு சுற்றுலா பயணிகளும் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் பயணிகள் பஸ் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் சிக்கி திணறியது. ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான சுற்றுலா இடங்களை காண முடியாமல் திரும்பி செல்லும் நிலையும் ஏற்பட்டது. எனவே இந்த நடைமுறையை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்கி நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின் நகர முடிந்தது. அதிகமான கடைகளும் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக உள்ளது. எனவே வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் சாலையின் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
அவசரத்துக்கு விபத்தில் சிக்கிக்கொண்டவர்களை கூட ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே இங்கு போக்குவரத்து காவலர்கள் நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும்.