ஓசூர் அருகே விவசாயி வெட்டி கொலை செய்த வழக்கில் மேலும் 4 பேர் கைது
- சிவராமனின் மகன் மதுகுமார் கொடுத்த புகாரின்பேரில் ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
- சரணடைந்த 2 பேரை சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள தமிழக மாநில எல்லையாக உள்ள ஜூஜூவாடி கிராமம் பாலாஜி நகரை சேர்ந்த சிவராமன் (வயது52) என்பவர் கால்நடை பண்ணை வைத்து
பராமரிப்பு செய்து வந்தார். இவருக்கு போப்பம்மாள் என்ற மனைவியும், மதுகுமார் என்ற மகனும், சைத்ரா என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 8-ந் தேதி வழக்கம்போல் கால்நடைகளுக்கு தேவையான தீவன புல்லை வாங்கி கொண்டு ஆம்னி காரில் வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் காரின் குறுக்கே வழி மறித்து கண்ணில் மிளகாய்பொடி தூவி பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து சிவராமனின் மகன் மதுகுமார் கொடுத்த புகாரின்பேரில் ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் ஓசூர் காவல் துணை கண்காணிப்பாளர் பாபு பிரசாத் தலைமையில் கொலை செய்தவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சிவராமனை கொலை செய்ததாக போச்சம்பள்ளி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.வீ.சண்முகநாதன் முன்னிலையில் நேற்று மதியம் 2 பேர் சரணடைந்தனர்.
சரணடைந்த இருவரும் ஜூஜூவாடி காந்தி நகரை சேர்ந்த சேகர் என்பவரது மகன் சீனிவாஸ் என்கிற காந்தி (26) அவரது நண்பர் ஓசூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஸ்ரீகாந்த் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து சரணடைந்த 2 பேரையும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக ஓசூரை அடுத்த பேகைப்பள்ளியைச் சேர்ந்த வெங்கடேஷ் மகன் முரளி (27), ஜூ ஜுவாடியைச் சேர்ந்த திலீப் குமார் என்கிற கொன்னே (28), மகேந்திரன் (32), ஊத்தங்கரையை அடுத்த ஆனந்தூரைச் சேர்ந்த சிம்புவின் மனைவி அனுசியா (23) ஆகிய 4 பேரை ஓசூர் சிப்காட் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.