ஓசூர் ரவுடி கொலையில் சங்ககிரி கோர்ட்டில் சரண் அடைந்த வாலிபர் சேலம் ஜெயிலில் அடைப்பு
- திலக் கடந்த 12-ந்தேதி ஓசூர் ரெயில் நிலைய சாலை பகுதியில் உள்ள பெரியார் நகரில் ஒரு கடையில் டீ குடித்து கொண்டிருந்தார்.
- போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஓசூர் டவுன் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
சங்ககிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அச்செட்டிப்பள்ளி அருகே உள்ள சொப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் திலக். பிரபல ரவுடி.
இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஸ்ரீராம் சேனா என்கிற அமைப்பின் நகர செயலாளர் மோகன்பாபு என்பவர் கொலை வழக்கில் கைதாகி, சமீபத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் திலக் கடந்த 12-ந்தேதி ஓசூர் ரெயில் நிலைய சாலை பகுதியில் உள்ள பெரியார் நகரில் ஒரு கடையில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினர், கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய ஓசூர் மத்திகிரி குதிரைபாளையத்தை சேர்ந்த முனிராஜ் மகன் சசிகுமார் (24) என்பவர் நேற்று சங்ககிரி 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி இனியா முன்னிலையில் சரணடைந்தார். அவரை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சசிகுமார், சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஓசூர் டவுன் போலீசார் திட்டமிட்டுள்ளனர். எனவே இதற்கான ஆவணங்களை போலீசார் விரைவில் கோர்ட்டில் சமர்ப்பிப்பார்கள் என தெரிகிறது.