திருக்கோளூர் அகழாய்வு பணியில் 324 தொல் பொருட்கள் கண்டுபிடிப்பு- ஆய்வாளர்கள் தகவல்
- கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முதல் முறையாக வாழ்விடப்பகுதிகளை கண்டறிய திருக்கோளூரில் அகழாய்வு பணிகள் தொடங்கியது.
- சுடுமண் சிலைகள், கண்ணாடி வளையல் துண்டுகள், சீன பானை ஓடுகள் என 324 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செய்துங்கநல்லூர்:
கடந்த 2020-ம் ஆண்டு நடந்த மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார்.
இதையடுத்து ஆதிச்சநல்லூரில் முதல்கட்டமாக அகழாய்வு பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து அருங்காட்சியக பணிகளும் நடந்து வருகிறது.
இதற்கிடையில் ஆதிச்சநல்லூரில் புதைக்கப்பட்ட மக்களின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிய ஆதிச்சநல்லூரை சுற்றியுள்ள திருக்கோளூர், அகரம், கொங்கராயகுறிச்சி, ஆதிச்சநல்லூர், கருங்குளம் ஆகிய 5 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தனர்.
இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முதல் முறையாக வாழ்விடப்பகுதிகளை கண்டறிய திருக்கோளூரில் அகழாய்வு பணிகள் தொடங்கியது. இந்த அகழாய்வு பணியில் தற்போது வரை 324 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகழாய்வு பணியில் இடைக்கால நாணயங்கள், வெண்கல வளையல், வெண்கல மோதிரம், கண்ணாடி மணிகள், சுடுமண் மணிகள், சுடுமண் சிலைகள், கண்ணாடி வளையல் துண்டுகள், சீன பானை ஓடுகள் என 324 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வல்லநாடு அருகே உள்ள அகரம் கிராமத்தில் வாழ்விடப் பகுதிகளை கண்டறியும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.