திருப்பாச்சூர் அருகே உதவி போலீஸ் சூப்பிரண்டு வாகனத்தில் 'லிப்ட்' கேட்டு போதை வாலிபர்கள் ரகளை
- மதுபோதையில் வாலிபர்கள் இருந்ததால் உதவி போலீஸ்சூப்பிரண்டுடன் வந்த போலீசார் அவர்களை எச்சரித்து அங்கிருந்து செல்லுமாறு கூறினர்.
- போதை வாலிபர்கள் 3 பேரை போலீசார் மடக்கி பிடித்து திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
திருவள்ளூர்:
மதுபோதையில் போதை ஆசாமிகள் செய்யும் ரகளை ஒவ்வொரு ரகமாக இருக்கும். சில நேரங்களில் யாரிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் வசமாக சிக்கிக்கொண்டு வாங்கி கட்டி செல்வார்கள்.
இதேபோல் திருவள்ளூர் அருகே போதை வாலிபர்கள் ரோந்து சென்ற உதவி போலீஸ்சூப்பிரண்டிடம் அவரது வாகனத்தில் லிப்ட் கேட்டு சிக்கிக்கொண்ட சம்பவம் நடந்து உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர் விவேகானந்த சுக்லா. இவர் தனது வாகனத்தில் திருப்பாச்சூர் அருேக ரோந்து பணியில் இருந்தார்.
அப்போது சாலையோரத்தில் மதுபோதையில் இருந்த 3 வாலிபர்கள் திடீரென உதவி போலீஸ் சூப்பிரண்டு வந்த வாகனத்தை வழிமறித்தனர். பின்னர் நாங்களும் இந்த வாகனத்தில் வருவோம் லிப்ட் வேண்டும் என்று கேட்டனர்.
மதுபோதையில் வாலிபர்கள் இருந்ததால் உதவி போலீஸ்சூப்பிரண்டுடன் வந்த போலீசார் அவர்களை எச்சரித்து அங்கிருந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அந்த வாலிபர்கள், போலீசார் உங்கள் நண்பன் என்று சொல்கிறீர்கள்... லிப்ட் கொடுக்க மாட்டீர்களா... என்று கேட்டு ரகளையில் ஈடுபட்டு வாகனத்தில் செல்ல அடம் பிடித்தனர்.
இதைத்தொடர்ந்து போதை வாலிபர்கள் 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அவர்கள் பிறையாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. போதை தெளிந்ததும் அவர்களிடம் போலீசார் தங்களது பாணியில் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.