உள்ளூர் செய்திகள்

ஆன்லைன் 'செக்ஸ்' செயலியில் ரூ.1 லட்சத்தை இழந்ததால் ஐ.டி. ஊழியர் தற்கொலை

Published On 2022-07-05 07:09 GMT   |   Update On 2022-07-05 07:09 GMT
  • ஆன்லைன் மோசடிகள் குறித்து காவல்துறையினர் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அதனை பலரும் கண்டு கொள்வதில்லை.
  • இதற்கு உதாரணமாக நெல்லை அருகே, ஆன்லைன் செயலி ஒன்றில் ஒரே நாள் இரவில் ரூ.1 லட்சம் வரை இழந்த ஐ.டி.ஊழியர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

நெல்லை:

ஆன்டிராய்டு செல்போன்கள் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய காலத்தில், நித்தம் நித்தம் உருவாகும் புது புது செயலிகளில் சில செயலிகள் மோசடிக்கு பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பாக இளைஞர்களையும், சிறுவர்களையும் மையப்படுத்திய சில செயலிகள் அவர்களை ஆன்லைனில் அடிமையாக்குவதோடு, லட்சக்கணக்கில் பணத்தையும் கறந்து விடுகிறார்கள்.

இதுபோன்ற ஆன்லைன் மோசடிகள் குறித்து காவல்துறையினர் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அதனை பலரும் கண்டு கொள்வதில்லை.

இதற்கு உதாரணமாக நெல்லை அருகே, ஆன்லைன் செயலி ஒன்றில் ஒரே நாள் இரவில் ரூ.1 லட்சம் வரை இழந்த ஐ.டி.ஊழியர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:-

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் தடி ஜெயசூர்யா(வயது 22). பி.டெக். பட்டதாரியான இவர் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

இதற்காக நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே பண்டாரகுளத்தில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தார். அவருடன் அதே ஊரை சேர்ந்த நண்பர் ஒருவரும் தங்கி உள்ளார்.

நேற்று காலை தனது நண்பரை வேலைக்கு அனுப்பி வைத்து விட்டு, அறைக்கு திரும்பிய ஜெயசூர்யா மாலை 5 மணிக்கு வேலைக்கு செல்ல வேண்டும்.

ஆனால் அவர் வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவரது நண்பர் அவரை தேடி அறைக்கு சென்றார். அப்போது வீட்டின் ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் தாழையூத்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவஇடத்திற்கு இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

ஜெயசூர்யா தற்கொலைக்கான காரணம் குறித்து அவரது நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நேற்று முன்தினம் அவரது செல்போனுக்கு ஒரு மேசேஜ் வந்ததும், அதில் மாடல் அழகியின் புகைப்படத்தை காட்டி, குறிப்பிட்ட ஒரு செயலியை டவுன்லோடு செய்யுமாறு அழைப்பு வந்ததும் தெரிய வந்தது.

அந்த செயலியை ஜெயசூர்யா டவுன்லோடு செய்துள்ளார். அதில் ஏராளமான மாடல் அழகிகளின் கிளுகிளுப்பான புகைப்படங்கள் இருந்துள்ளது. அந்த அழகிகளுடன் ஜாலியாக பேசுவதற்கு, பழகுவதற்கு, உல்லாசமாக இருப்பதற்கு என தனித்தனியாக பணம் நிர்ணயித்துள்ளனர்.

அதில் மணிக்கு ரூ.2500 முதல் ரூ.20 ஆயிரம் வரை இருந்ததாகவும், அவற்றில் சில அழகிகளின் பெயரில் ஜெயசூர்யா பணத்தை கட்டி உள்ளார். ஆனால் அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் சென்ற பின்னர் செயலியில் இருந்து உரிய பதில்கள் வரவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் மீண்டும், மீண்டும் அந்த செயலியில் உள்ள பல்வேறு அழகிகளின் பெயரில் பணத்தை கட்டி ஒரே நாளில் ரூ.1 லட்சம் வரை கட்டி உள்ளார். ஆனால் பணத்தை இழந்தது மட்டுமே மிச்சம் ஆகி உள்ளது. குறிப்பிட்ட அழகிகளிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. அதன் பின்னர் அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.

இதனால் நேற்று காலை அவர் செயலியில் குறிப்பிட்டிருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு தான் கட்டிய பணத்தை மட்டுமாவது திரும்ப தந்து விடுங்கள் என கேட்டுள்ளார். அப்போது மறுமுனையில் பேசியவர்கள் அவரை திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதுதொடர்பாக அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News